மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருவது விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மள மளவென அதிகரித்து 117 அடிக்கு உயர்ந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 10,600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தைவிட, திறக்கப்படும் நீரின் அளவு அதிகம்  உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல குறைந்து வருகிறது.

கடந்த 24ம் தேதி 117.30 அடியான நீர்மட்டம், நீர்வரத்து சரிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு 117.29 அடியானது. நேற்று மாலை 4 மணிக்கு 117.23 அடியானது. நீர்வரத்து விநாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக சரிந்தது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 11 ஆயிரம் கனஅடியானது. நீர்வரத்தை விட, பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர், கடைமடை பகுதியை இன்னும் சென்றடைய வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவது பாசன விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.