வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட அறிக்கை

ரூ.19,425 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

கோவை மாவட்டத்திற்கான 2019-2020ஆம் ஆண்டில் ரூ.19,425 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (22.08.2019), கோவை மாவட்டத்திற்கான 2019-2020 ஆம் ஆண்டிற்கான வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) செல்வராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வெங்கட்டரமணன், கனரா பேங்க்  துணை பொது மேலாளர் ரமேஷ், நபார்டு வங்கி மாவட்ட  மேலாளர் இசக்கிமுத்து, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், ஓவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிக பட்சமாக ரூ.19425 கோடிக்கு கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாராமாய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2019-2020ஆம் வருடத்திற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ.7440 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.8673 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.3312 கோடி என ஆக மொத்தம் ரூ.19425 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை பகுதிகளில் புதிய ஆய்வுகளை துவங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வரும்காலங்களில் அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை என்ற காலஅளவின்படி செயல்படும். எனவேபொதுமக்கள் அனைவரும் வங்கி சேவையினை பயன்படுத்தி கொள்ளலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கூறியுள்ளார்.