மரங்களை வெட்டுவோம்!

மரங்கள் எதற்கு?

மனிதனே முக்கியம்!

வளர்ச்சியே முக்கியம்!

நான்கு, ஆறு வழிச்சாலைகள், தொழிற்சாலைகள்!

வேலைவாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம்!

-ஆக, மரங்கள் எதற்கு? வளர்ச்சியே முக்கியம்!

 

அவினாசி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு சாலைகள்… தற்போது உடுமலை சாலையிலும்…

“வேண்டாம்“  என்று வெட்டப்படும் மரங்கள்!

காரணம், பெருநகர் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி!

ஆக, மரங்கள் எதற்கு?

பயன் ஒன்றும் இல்லையோ?!

அவ்வாறும்… சொல்லிவிட இயலாது!

பாடப்புத்தகங்களில் கட்டுரை வேண்டும்..

கூட்டங்களில் பேச வேண்டும்..

கூடிநின்று கைதட்ட வேண்டும்..

புகைப்படத்திற்கு கைகாட்ட வேண்டும்!

-அதற்கு மரக்கன்றுகள் ஆயிரம், இலட்சங்கள் வேண்டும்!!

மண்ணோடு மக்கிப்போவதற்கு வீண் செலவெதற்கு?

– வேண்டாம் வெட்டிவேலை!

மரங்களை வெட்டுவோம்! வளர்ச்சியே முக்கியம்!

 

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!

கோவை அதிலே முக்கியப் பிள்ளை!

எத்துணை மக்கள் இங்கே?!

எங்கெல்லாம் இருந்துவந்துள்ளனர்! அவர்களுக்கு

என்னவெல்லாம் செய்யவேண்டும்?!

அவர்களின் வாழ்வுதானே முக்கியம்?!

மரங்கள் எதற்கு? வளர்ச்சிதான் முக்கியம்!

 

மும்மாரி பொழியவில்லை! தண்ணீர் இல்லை! அதனால் என்ன?

பருவமழை காணவில்லை! சிறுதூரல்தான்! அதனால் என்ன?

கோவையின் குளுமையைக் காணவில்லை! அதனால் என்ன?

விவசாயத்திற்கு தண்ணீர் தேவை!

தண்ணீர் லாரி இருக்கு!

தாகத்திற்கு தண்ணீர் தேவை!

தண்ணீர் பாக்கெட் இருக்கு!

பாக்கெட்டில் அத்தனையும் இருக்க..

மரங்கள் எதற்கு? வளர்ச்சிதான் முக்கியம்!

 

வெட்டுவோம் மரங்களை!

கோவையை சிங்கப்பூர் ஆக்குவோம்!

சிங்கப்பூரில் என்ன மரங்களா இருக்கு?!

விவசாய பூமிகள் அனைத்திலும்…

நீர்நிலைகள் அனைத்திலும்…

சிந்தை மயக்கும் மாளிகைகள் கட்டுவோம்!

கோவையை சிங்கப்பூர் ஆக்குவோம்!

 

ஊரைச்சுற்றி வெட்டியாச்சு,

ஊருக்குள்ளும் வெட்டியாச்சு,

வீட்டுக்குள்ளும் வெட்டியாச்சு,

காட்டுக்குள்ளும் வெட்டியாச்சு,

இனி, அரசமரப் பிள்ளையாரையு‹ தூக்குவோம்!

 

சாலையெங்கும் மரம்நட்ட அசோகன் ஒரு ‘வெட்டிப்பையன்’!

நாமே சிறந்தவர்கள், நமது கொள்கையே சிறந்தது!

நாளைய தலைமுறைக்கு சொத்துக்களே முக்கியம்!

தண்ணீரா முக்கியம்? – ஆகவே,

மரங்களை வெட்டுவோம்! வளர்ச்சியே முக்கியம்!

 

நாட்டிலே, மாநிலத்திலே…

பல பகுதிகள் இருந்தாலும்,

ஒரு ஊரைத் தேர்ந்தெடுத்து,

அங்கேயே எல்லா வளங்களையும் கொட்டி…

சாக்கடைகளை அடைத்து…

மரங்களை வெட்டி வளர்ச்சியைக் காண்போம்!

புதிய பாரதம் படைப்போம்!

மரங்கள் எதற்கு?

அவை வெறும் ஆக்ஸிஜன்தரும் பிணங்கள்!

ஆக்ஸிஜனையும் பாட்டிலில் வாங்கலாம்!

மரங்களை வெட்டுவோம்! வளர்ச்சியே முக்கியம்!

 

– கா.அருள்