காவலன் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம்!

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலியில் புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

காவலன் என்ற பெயரில் செயலி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்வோர், தங்களுடைய வீடுகளின் விவரங்களை இந்த செயலி மூலம் பதிவு செய்யலாம். இதை வைத்து போலீசார் அந்த வீடுகளை கண்காணித்து பாதுகாப்பை உறுதி செய்வார்கள். இந்த காவலன் செயலி தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண், இருசக்கர வாகனங்களின் விவரங்கள் குறித்தும் இந்த செயலியில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இருசக்கர வாகனங்கள், செல்போன் திருடு போனால் எளிதாக கண்டுபிடிக்க முடியும். மேலும் செயலியை முதியவர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் வாய்ஸ் மூலம் பதிவு செய்யும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. இதனை தமிழ், ஆங்கில மொழியில் பயன்படுத்தலாம்.