இரத்தினம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

இரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர் துணை கமிஷனர் (அமலாக்க) முருக குமார், கர்நாடகாவின் ஹப்பல்லி, தென் மேற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை சிக்னலும் தொலைத் தொடர்பு பொறியியலாளருமான பாஸ்கரன், நமது நம்பிக்கை பத்திரிகை ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பங்கேற்றனர். இரத்தினம் கல்வி நிறுவனத் தலைவர் மதன் ஏ. செந்தில், தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், நிர்வாக இயக்குநர் அழகன் சத்திய நாதன், முதல்வர் சிவகுமார் கிருஷ்ணன், தொழில்நுட்ப வளாகத்தின் வணிகப் பிரிவுத் தலைவர் நித்தியானந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

முதல்வர் சிவகுமார் கிருஷ்ணன் வ‌ர‌வேற்றார்.

இரத்தினம் கல்வி நிறுவனத் தலைவர் மதன் ஏ. செந்தில் சிறப்புரையில் உலக நாடுகளில் அடுத்த 30 ஆண்டுகளில் மற்ற நாடுகள் வெறும் மூன்றில் இருந்து நான்கு மடங்கு தான் வளர்ச்சி பெரும். இந்தியா மட்டும்தான் 20 மடங்குவரை வளர்ச்சி பெறும்.  இந்த வளர்ச்சி இன்ஜினியர் இல்லாமல் ஏற்படாது. ஓவ்வொரு பிரச்னையும் ஒவ்வொரு வாய்ப்புகள். அதனை சரியாகப் பயன்படுத்தி கொள்ளுங்கள். இதற்கு இரத்தினம் உங்களுடன் பயணிக்கும் என்றார்.

நிர்வாக இயக்குநர் அழகன் சத்திய நாதன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் முருக குமார், வாழ்க்கையில் மிக உன்னதமான இடத்தை அடைய முதலடியை எடுத்துவைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள், நமது முயற்சியில் தான் நாம் வெற்றியடைய முடியும். கல்லூரி படிப்பு என்பது ஒரு பகுதிதான். அது போக நீங்கள் கற்றுக் கொள்வதுதான் முக்கியமானது. நமது திறமையை நாம் முழுவதும் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் இழப்பு என்பது நமக்குத் தான். மணலில் தோண்டத்தோண்ட தான் நீர் பெருகும், அதே போல் புத்தகங்கள் படிக்க படிக்கத்தான் அறிவு பெருகும் என்றார்.

சிறப்பு விருந்தினர் பாஸ்கரன், பயப்படாதீர்கள், படித்தால் உங்களுக்கு பயம் வராது. என்னைவிட சிறந்தவன் இந்த  வகுப்பில் இல்லை என்றும் எங்கள் கல்லூரியைவிட சிறந்த கல்லூரி இல்லை என்றும் சொல்ல வேண்டும். இது எப்பொழுது நடக்கும் என்றால், நீங்கள் அனைத்திலும்  தன்னம்பிக்கை கொள்ளும்போது வரும், என்றார்.

சிறப்பு விருந்தினர் மரபின் மைந்தன் முத்தையா பேசுகையி்ல், யார் காலத்தை மதிக்கிறார்களோ, அவர்கள் காலம் மதிக்கும் விதத்தில் சில செயல்களை செய்ய முடியும். உலகமே உங்களை கவனிக்கும் பொழுது உங்கள் கவனம் படிப்பில் இருந்தால் உங்கள் வெற்றி தடுக்க முடியாதது, என்றார்.

தொழில்நுட்ப வளாக வணிகப் பிரிவுத் தலைவர் நித்தியானந்தன் நன்றி கூறினார்.