வரலட்சுமி விரதமும் பாக்கியமும் !

மகாலட்சுமி தேவிக்காக இருக்கும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதம். தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தபோது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரை மகா விஷ்ணு மணந்து கொண்டார்.

ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில தருணங்களில் ஆடி மாதத்தில் வரும். திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கின்றனர். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வதோடு இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் பெருகவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். இந்த வருடம் ஆகஸ்ட் 9, வெள்ளிக்கிழமை வருகிறது.

எட்டு வகையான செல்வங்கள் :

எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமி. மஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவி. மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர். இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம்.

வரலட்சுமியை வணங்கும் முறை :

இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வைத்து வணங்கி வழிபாட்டை தொடங்குவர். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு என்பவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயின் அருகே வைப்பர். ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுவர். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர்.

முதலில் விநாயகர் பூஜை :

விரத பூஜைக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப்பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம்.

லட்சுமியின் 108 போற்றி மற்றும் அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும். ‘மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்’ என்று மனம் உருக வணங்க வேண்டும்.

வரலட்சுமி விரதத்தின் பயன்கள் :

பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறும். சுமங்கலி பெண்கள் தம் குடும்பம் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழவும், செல்வங்கள் பெருக வேண்டும் என்றும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், தேவியிடம் வரங்களை வேண்டி வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

வரலட்சுமி விரதத்தை நிறைவு செய்யும் முறை :

பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்று, காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முறித்து தாமும் உண்டு விரதத்தை நிறைவேற்றுவர்.

வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது வடஇந்தியமக்களும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.