மழைநீர் சேகரிப்பு பற்றிய ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி, ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், தலைமையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களின் கட்டிடங்களில் துரிதமாக ஏற்படுத்துதல் குறித்து மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், தன்னார்வ அமைப்பினருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்  முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தெரிவித்ததாவது, கோவையில் 100 வார்டுகளிலுள்ள அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள், தனியார் நிறுவனங்களின் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தவறாமல் அனைவரும் அமைத்திடல் வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அனைத்து வீடுகளிலும் உள்ளதா என்பதை மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் செயல்பாட்டு நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இக்கட்டமைப்புகள் இல்லாத கட்டிடங்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். புதிதாக வரிவிதிப்புக்கு முன்பு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே சம்மந்தப்பட்டவர்களுக்கு வரிவிதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு வாகனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பலகைகள் வைத்திட அனைத்து மண்டல உதவி ஆணையர்களும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரு வார்டுக்கு 3 பேர் கொண்ட குழுவும், 5-வார்டுகளுக்கு சேர்த்து ஒரு கண்காணிப்பு அலுவலரும் நியமிக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளை ஆய்வு செய்து துரிதமாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் கருதி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வீடுகளில் தவறாமல் அமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில்அரசன், செயற்பொறியாளர்கள் ஞானவேல், சரவணக்குமார், மற்றும் பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.