என்.ஜி.பி கல்லூரியில் 12 ஆவது ஆண்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 12 ஆவது ஆண்டு விழா அண்மையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இக்கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் இவ்விழாவில் மகிழ்ச்சியோடு பங்கேற்றனர். மாணவர்கள் பொறியாளர்களாக  மட்டுமல்லாது பன்முகத்திறன் உடையவர்களாக உள்ளனர் என்பதை அவர்கள் இவ்விழாவில் நிகழ்த்திய கலைநிகழ்ச்சி சான்றாக உள்ளது. அவர்கள் மிகச்சிறந்த பாடகர்களாக, இசைக்கலைஞர்களாக, மேற்கத்திய, கிராமிய நடனங்கள் மற்றும் பரதநாட்டியங்கள் என்று பல்வேறு கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர்.

இவ்விழாவில் கோவை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி  மையத்தின் தலைவர் பேசுகையில், ”நம் கல்லூரி பொறியியல் மாணவர்களால் இக்கல்விநிறுவனம்  மென்மேலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது” என்றும், உயர்தரமான கல்வியை ஒழுக்கத்துடன் அனைவருக்கும் வழங்குவதையே தமது முதன்மை நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் மாணவர்களிடம்  ”எதிர்காலப் பொறியாளர்களாகிய நீங்கள் எதையும் வித்தியாசமாக அணுகுவதன் மூலமே தனித்தன்மை வாய்ந்து திகழமுடியும். உங்களுக்குள் எல்லையில்லாத ஆற்றல் புதைந்து கிடக்கிறது. அந்த ஆற்றலை இந்த தேசத்திற்கு முறையாக முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் உங்களால் இந்த தேசமும், தேசத்தால் நீங்களும் மேம்பட முடியும்” என்று தெரிவித்தார். மேலும் அவர் மாணவர்களிடம், ”நான் உங்கள் திறமைகள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். நீங்கள் அனைவரும் தலைச் சிறந்த தொழில் நிபுணராக, சிறந்த கல்வியாளராக,  தொழில் அதிபர்களாக வரவேண்டும்” அதற்கு உங்களை நீங்களே அறிந்துகொள்ள  வேண்டும்  என்று கூறி  தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் செயலர் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்றும், அதில் தாம் கலந்து கொண்டமை மகிழ்வைத் தருகிறது என்றும் தெரிவித்தார். மேலும் அவர், ”நீங்கள் அனைத்து வகைகளிலும் மேம்பட வேண்டும், சிந்தனைத் திறனை உயர்த்துவதன் மூலம் சாதாரண மனிதனும் சாதனையாளனாக மாறி சிகரத்தைத் தொட முடியும், உங்களை நீங்களே மதித்து அங்கீகரியுங்கள், அது உங்களுக்கு நீங்களே தரும் அரும் பரிசு” என்றும் அவர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட புதுதில்லி வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் வேளாண் பொறியியல் மற்றும் இயற்கைவள மேலாண்மை இணை இயக்குனர் டாக்டர் கே. அழகுசுந்தரம் அவர்கள் பேசுகையில், ”உங்களை நீங்களே உயர்ந்த மனிதராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அம்மதிப்பைப் பிறரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே முதலில் தன்மதிப்போடு வாழுங்கள். உங்கள் உயர் இலட்சியக் கனவுகள் குறித்து சிந்தியுங்கள், அதற்காக கடினமாகப் பாடுபடுங்கள். உங்கள் கனவு ஒரு நாள் மெய்ப்படும்.  கல்வி என்பது வெற்றிக் கதவுகளை திறக்கும் சாவி, மனித அறிவை விரிவு செய்யும் அற்புதக் கருவி. கற்றுக் கொள்வதன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும், பெற்றுக் கொண்டால் மட்டுமே சமூகத்திற்கு வழங்க முடியும். ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னாலும் கல்விதான் இருக்கிறது. உங்கள் வாழ்வின் சிக்கல்களை தீர்ப்பதற்கு, பிறருக்கு கற்பிப்பதற்கு. உயர்நிலைகளில் இயங்குவதற்கு, உங்கள் கருத்துக்களை தெரிவிக்க, செயல்படுத்த என்று அனைத்திற்கும் மூல ஆதாரமாக கல்வியே விளங்குகிறது.

இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இருப்பதைவிட மாறுபட்ட புதிய வேலைவாய்ப்புகள் தோன்றும். அதற்கு இன்று நாம் கற்கும் கல்வி போதாது. எனவே மாணவர்கள் வெற்றியாளர்களாக ஆவதற்குத் தேவையான திறன்களை வழங்க அரசாங்கம், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள்,  தொழில்நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். கல்வியில் சாதனைபுரிந்த மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.