மெட்ரோ ரயில் கனவு நிறைவேறுமா?

இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை சமீபத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். கபாலி பாஷையில் சொன்னால் மகிழ்ச்சி!. ஆனால் கூடவே கோயம்புத்தூருக்கும் ஒரு மெட்ரோ ரயிலோ, மோனோ ரயிலோ கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வந்ததாக ஒரு நினைவு.

மற்ற இடங்களில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் கோவையில் மட்டும் அறிவிப்புகளோடு நிற்கிறது. இதைப் போலவே பொள்ளாச்சி திண்டுக்கல் ரயில் பாதை, பெங்களூர் இரவு நேரரயில், இரண்டடுக்கு ரயில் என்றுபல அறிவிப்புகளை மட்டும் கேட்டுக்கொண்டு கோயம்புத்தூர் அப்பாவிகள் ராஜ முழி முழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்தின் பெரிய உதவிகள், முயற்சிகள் எதுவும் இல்லாமல் இங்கு தொழில்களும் வளர்ந்து ஊரும் வளர்ந்திருக்கிறது. அதேபோல, இந்த மெட்ரோ ரயிலும் தானாக வந்து விடும் என்ற எண்ணத்தில் அரசாங்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு பகுதியில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் ஒரு தொழிற்சாலை வருகிறது என்றால் அரசாங்கம் எத்தனை சலுகைகளை அள்ளித் தருகிறது? அப்படி இருக்கும் போது ஆயிரமாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும், வாழ்வும் தருகின்ற ஒரு ஊருக்கு போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் ஒரு மெட்ரோ ரயிலை தருவதில் என்ன தயக்கம் அல்லது தடை இருக்கிறது என்பது புரியவில்லை.

கொஞ்சம் பெரிதாக ஒரு மழை அடித்தால் போதும். வர்தா புயலடித்த சென்னை தள்ளிநிற்க வேண்டும்; அப்படி கோவை நகரம் ஸ்தம்பித்து விடும். நகரமே கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிந்துவிடும். மழைநீரோடு சேர்ந்து மக்களும் எங்கு போவது என்று தெரியாமல் இஞ்ச், இஞ்ச் ஆக நகரும் நிலை தான் கோயம்புத்தூரில் இருக்கிறது.திரும்பிய பக்கம் எல்லாம் மழை நீர் தேங்கிநிற்கும். கட்டிய பாலம், கட்டாதபாலம், சாலை, தெரு, சந்து, பொந்து என எல்லா இடங்களிலும் வாகனங்கள் நிரம்பி வழியும். ஆம்புலன்ஸ் வந்தாலும் சரிஅல்லது அந்த ஆண்டவனே இங்கு வந்தாலும் சரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி சீரழிய வேண்டியது தான். கோவை நகரத்தின் எதிர்கால அச்சுறுத்தல்களில் ஒன்றாக இந்த போக்குவரத்து நெரிசல் மாறிவருகிறது. இதற்கான தீர்வுகளில் ஒன்றுதான் மெட்ரோ ரயில் திட்டம்.

இந்த மெட்ரோ ரயில் திட்டம் ஒரு சர்வரோக நிவாரணி அல்ல. ஆனால் இதுபோன்ற சில திட்டங்கள்தான் கோயம்புத்தூர் நகரத்தை போக்குவரத்து நெரிசலில் இருந்து காப்பாற்றி மூச்சுவிட வைக்கும். மற்ற பகுதிகளைப்போல கோயம்புத்தூர் நகரமும் இருந்திருந்தால் இதற்கு பெரிய அவசியம் இல்லை. ஆனால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, பெரு, இன்னும் பலவகை தொழிற்சாலைகள் இங்கே நிறைந்திருக்கின்றன. பல லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இருபது லட்சம் பேர் தினமும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. ஆனால் சாலை வசதி மட்டும் கூடுவதில்லை. அதற்கான வசதி இல்லாத நிலையில்தான் இது போன்ற மெட்ரோ ரயில்திட்டங்கள் தேவைப்படுகின்றன.

இந்திய தொழில் வர்த்தகசபை உள்ளிட்ட பல தொழில் அமைப்புகள், வணிக அமைப்புகள், மற்ற பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் இதற்காகவலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் ஒரு துரும்புகூட அசைந்ததாக தெரியவில்லை.

சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் குகைப்பாதை போல ஒரு சுரங்கப்பாதை அற்புதமாகக் கட்டி முடிக்கப் பட்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் அமைந்த பகுதியில் ஒரு நீளமான பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. மும்பையில் கடல் மீது பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கே? இங்கே ஒரு சாதாரண மேம்பாலம் அமைப்பதற்கு எவ்வளவு ஆண்டுகள் பிடிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

சாலை வசதியைப் பொறுத்த வரை 1970களில் ஒரு அவிநாசி ரோடு மேம்பாலம், அது வெள்ளி விழா கொண்டாடிய பிறகு வந்தது வடகோவை மேம்பாலம், அடுத்து அதேபோல ஆண்டுக் கணக்கில் காந்திபுரம் மேம்பாலம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சில பாலங்களை நாம் கட்டி முடிப்பதற்குள் மற்ற நகரங்களில் பல பாலங்கள் கட்டப்பட்டு வசதிகள் பெருகி விடுகின்றன. கோவையில் மட்டும் ஏன் இந்த புயல் வேகம்?! என்று தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு ஒரேசமயத்தில் நாட்டின் பல பகுதிகளில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு பலசிரமங்கள் இருக்கலாம். சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் கோயம்புத்தூர் போன்ற பகுதிகளில் இதுபோன்ற திட்டங்கள் என்பது உடனடி தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அதுவும் தொழில் வளம் மிகுந்த உற்பத்தி சார்ந்த, வேலைவாய்ப்பு தருகின்ற ஊருக¢கு இங்கிருக்கும் சிக்கலைத் தீர்க்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சாலை வசதி இப்படி என்றால் ரயில்கள் பற்றி கேட்கவே வேண்டாம். கோவை வழித்தடத்தில் ரயில்கள் ஓடும், ஆனால் சில ரயில்கள் கோவையில் மட்டும் நிற்காது. கோவை சந்திப்பு போன்ற இடங்களிலேயே நிற்காமல் போகும் அளவு அவை என்ன அப்படிப்பட்ட புல்லட் ரயில்களா? அவை யாருக்காக ஓடுகின்றன? கோவை வழியாக ஓடுகின்ற ரயிலே நிற்காமல் போகும் போது புதிய ரயில்கள் என்பவை கிட்டத்தட்ட பகல் கனவாகவே நீடிக்கின்றன. கோவை மக்கள் ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுத்தே சலித்துப்போய் விட்டனர்.

பொதுமக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தேர்தல் சமயத்தில் மட்டும் எட்டிப் பார்த்து தீபாவளி கொண்டாடி விட்டு போய்விடுகிறார்கள். அதன் பிறகு தேசியகட்சிகள் தேசிய அளவில் பணியாற்றுவதும், தமிழக அரசியல்வாதிகள் தமிழக அளவில் அக்கறை செலுத்துவதாலும், அவர்களால் இது போன்ற சின்னஞ்சிறு?! விஷயங்களில் கவனம் செலுத்த முடிவதில்லை. எனவே அவர்கள் மீது எந்த குற்றமும் இல்லை. இதுபோன்ற திட்டங்களை பெறாததற்கு காரணம், அவர்களை நம்பிக்கொண்டு இருக்கும் நாம்தான் என்பதை உணரவேண்டும்.

இப்போதும் இந்த கோயம்புத்தூரில் போக்குவரத்து சிக்கலைத¢தீர்க்க எளியவழி ஒன்று இருக்கிறது. எப்படியும் மெட்ரோவோ, மோனோவோ எதுவும் வரப்போவதில்லை. அதனால் தற்போது அரசு மாணவர்களுக்கு வழங்குவது போல வீட்டுக்கு இரண்டு சைக்கிள்கள் கூடுதலாக வழங்கலாம். சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும் சொல்லிக் கொள்ளலாம். மேலும் இதனால் தினம்தோறும் மாறும் பெட்ரோல் விலையைப்பற்றி யாரும் எந்த கவலையும் படவேண்டிய தில்லை. அதைப்போலவே இலவச ஆடு வழங்கும் திட்டத்தைப்போல மாடுகள் வழங்கி மாட்டு வண்டியை குடும்ப வாகனமாக ஓட்டி பழகிக் கொள்ள சொல¢லலாம்.

யாரோ எங்கேயோ மெட்ரோ ரயில் விடட்டும், ராக்கெட் விடட்டும், நமக்கென்ன? நாம் குறட்டை விடுவோம், கூடவே இதுபோன்ற திட்டங்களை கோட்டை விடுவோம்.

– ஆசிரியர் குழு.