மீண்டும் வரவேண்டும் பிரமாண்டமாய்!

தமிழகத்தில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து நடந்திருக்கிறது. சிவகாசி பட்டாசு தொழிற் சாலை, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல இதுவும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இதில் உயிர்ப்பலி எதுவும் இல்லை என்பது ஒரு பெரிய ஆறுதல்.

தி.நகர் என்பது சென்னையின் மக்கள் நெருக்கம் மிகுந்த, அங்காடிகள் அதிகம் கொண்ட ஒரு பகுதி. பத்து ரூபாய் பிளாஸ்டிக் பொருள் விற்கும் நடை பாதைக்கடை முதல் பல கோடி ரூபாய் வணிகம் செய்யும் நகைக்கடை வரை இங்கு உண்டு. இங்குள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை வளாகத்தில் தான் அந்த தீ விபத்து நடந்தது. வழக்கம்போல இந்த தீ விபத்து உடனடியாக தலைப்புச் செய்தியாகி விட்டது. செய்தித்தாள்களில் செய்தி, ஊடகங்களில் விவாதம், நேரடி ஒளிபரப்பு என்று பரபரப்புகளுக் கிடையில் இருபத்து நான்கு மணி நேரத்துக்கும் மேலாக தீ கொழுந்து விட்டெரிந்தது. அப்பகுதியே புகை மண்டலத்தில் சிக்கித் தவித்தது.

தீயணைப்புப் படையினர் என்ன போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. அடுத்த நாள் ஏழு மாடிகளும் இடிந்து விழுந்தன.  இதன் தொடர்ச்சியாக அப்பகுதியின் பல கோடி ரூபாய் வணிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பலநூறு பேர் வேலை இழந்திருக்கிறார்கள். சுமார் 400 கோடி ரூபாய் நஷ்டம் என்று முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. தீவிபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். ஒரு விழாக்காலத்தில் மக்கள் நெருக்கமாக நடமாடும் ஒரு மாலை நேரத்தில் இந்த தீ விபத்து நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? பொருள் நஷ்டத்தோடு பல அப்பாவி மக்களின் உயிரும் அல்லவா பலி கொடுக்கப் பட்டிருக்கும். கூடவே அருகில் வணிகம் செய்யும் பல பேரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஏதாவது அசம்பாவிதம் நடப்பதும், பரபரப்பாக அது குறித்து பேசப்படுவதும், விசாரணைகள் நடத்தப்படுவதும் தவிர வேறு எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

தி.நகர் தீ விபத்தைப் பொறுத்த வரை விபத்து என்பதைத் தாண்டி பல பாடங்களை அது நமக்கு கற்றுத் தந்து சென்றிருக்கிறது. நம்முடைய சட்டம், பாதுகாப்பு, வணிக முறை குறித்து பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க சிந்தித்து செயல்பட வேண்டியது ஒரு அறிவார்ந்த சமூகத்தின் கடமை இல்லையா?

முதலில் இந்த வணிக நிறுவனம். அந்த நிறுவனத்துக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.  ஈடுசெய்ய முடியாத இழப்பு. அதிலிருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என்பது தான் அனைவரின் எண்ணமும். என்றாலும் பல ஆண்டுகளாக இந்த துறையில் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்  தங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவர்களைப் போன்றவர்களின் தார்மீகக் கடமையாகும்.

இது போன்ற கடைகளில் ஐந்து மாடி, ஏழு மாடிகள் இருக்கும். பல அலங்கார விளக்குகள் இருக்கும். ஏ.சி. இருக்கும். சிசிடிவி கேமரா இருக்கும். உள் அலங்காரம் இருக்கும். ஆனால் நுழைவாயில் மட்டும் ஒன்றே ஒன்று இருக்கும். ஏதாவது ஆபத்து என்றால் உள்ளே இருக்கும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பேர் எப்படி வெளியேறுவது என்பதற்கு எந்த விடையும் இல்லை. இது போன்ற அங்காடிகளை வடிவமைக்கும் போதே பாதுகாப்பு தன்மை குறைவாக இருப்பது ஏன் யார் கண்ணிலும் படுவதில்லை? முதலில் ஏன் அனுமதி பெறாத கட்டுமானங்களை சட்டத்தை மீறி கட்ட வேண்டும்? அடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இடத்துக்கு உண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் வேண்டாமா? பொது மக்கள் வேண்டாம், அங்கு பணி புரியும் பணியாளர்கள், ஏன் முதலாளியே நான்காவது தளத்தில் இது போல ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும்?

உலகத்தரத்தில் வணிகம் செய்யும்போது அதே அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டாமா? ஏதாவது திருட்டு நடந்தால் கண்டுபிடிக்க சிசிடிவி வைக்கும் நிறுவனங்கள், பாதுகாப்பு வழிகள், தீயோ, புகையோ எழும் போது தொடக்கத்திலேயே அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் அதற்கான அலாரம், மற்ற கருவிகள் இவை குறித்து கவனம் செலுத்த வேண்டாமா?

அடுத்து அரசாங்கம். அரசாங்கம் என்பது அதன் அதிகாரிகளையும் செயல் பாடுகளையும் தான் குறிக்கிறது.  இது போல மாபெரும் அங்காடி வளாகங்கள் புதிதாக உருவாகும் போது பல குறுகலான வீதிகளிலும், இடங்களிலும் தான் அமைக்கப் படுகின்றன. அந்த நிலையில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அதன் கட்டுமானங்கள், செயல்பாடுகள் இருக்கிறதா, அந்த கட்டுமானங்கள் அமைய முறையான அனுமதி பெற்றிருக்கிறார்களா, அவற்றையெல்லாம் அதிகாரிகள் கவனிக்கிறார்களா என்ற ஐயம் தற்போது எழுகிறது. இது போன்ற இக்கட்டான சமயங்களில் தீயணைப்புத் துறையினர் போன்றவர்கள் கூட இந்த இடத்தை அடைய முடியாமலும், திறமையாக செயல்பட முடியாத வகையிலும் நமது உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருக்கின்றன. தீயணைப்புத் துறையினர் செயல்பட முடியாமல் போன ஒவ்வொரு விநாடியும் இந்த விபத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போனது.

இந்த குறிப்பிடத்தக்க கடை மட்டுமல்லாது சென்னை, கோவை போன்ற பல ஊர்களிலும் இது போன்ற பல பெரிய அங்காடிகளில் பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக பொது மக்களும், துறை சார்ந்த வல்லுநர்களும் கருது கிறார்கள். ஆனால் அவர்களின் குரலை கேட்பதற்குத்தான் யாரும் இங்கு இல்லை. எதிர்காலத்தில் இது போன்ற அங்காடி வளாகங்கள் நெருக்கடி மிகுந்த ஆபத்தான வகையில் அமையாமல் காலத்துக் கேற்றவாறு இடவசதி மிகுந்த பாதுகாப்பான இடங்களில் முறையாக அமைய வேண்டும். நான் மாறவே மாட்டேன் என்று அடம் பிடிப்பது அறிவீனம்.

தெருக்கூத்து, நாடகம், திரைப் படம், தொலைக்காட்சி என்று காட்சிப்படம் எத்தனையோ வடிவம் எடுத்து விட்டது. அதைப் போலவே வணிகத்தில் தெருவணிகம், தொடங்கி சந்தை, கடை, சூப்பர் மார்க்கெட் பிறகு ஆன்லைன் வணிகம் வரை வந்தாயிற்று. எனவே நவீன முறைகளுக்கு மாறுவதோடு அனைவருக்கும் பாதுகாப்பான வணிக முறைகளை கடைபிடிக்க வேண்டியது வணிகம் சார்ந் தோரின் கடமையாகும்.

இது போன்ற சம்பவங்கள் ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் ஒரு பின்னடைவு, பாதிப்பு பெரும் பொருளாதார நஷ்டம். ஒரு வணிக நிறுவனம் பாதிக்கப்பட்டு பல பேரின் வேலைவாய்ப்பு பறி போவதில் யாரும் மகிழ்ச்சியடைய முடியாது. ஆனால் அதற்கான காரணங்களை கண்டறிந்து களைய வேண்டிய கடமையும் பொறுப்பும் சம்பந்தப் பட்டவர்களுக்கு உண்டு. அதுவும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போதாவது அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் இதில் தீவிர கவனம் செலுத்துவது மக்களுக்கும் நல்லது, வணிக நிறுவனங்களுக்கும் நல்லது. மொத்தத்தில் நாட்டுக்கு நல்லது.

இந்நிர்வாகத்தினர் புண்ணியம் செய்து இருக்கிறார்கள். அதனால் தான் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை.  இழந்த பொருள் செலவை சமாளித்து மீண்டும் வரவேண்டும் பிரமாண்டமாய்.

– ஆசிரியர் குழு

 

மீண்டு வருவேன்…. மீண்டும் வருவேன்……

எனது உருவம்…. என்னை உருவாக்கியவரின்

வியர்வைத் துளிகள்!

எனது புகழ்… மக்கள் கொடுத்த நற்பரிசு!

எனது கடமை… என்னுள் உழைத்து கொண்டிருக்கும் பணியாளர்கள்!

குடும்பங்களின் குதூகலத்துடன், சிறார்களின் சிறு கனவுகள்…

ஆடவரின் ஆர்ப்பரிப்புகள்…

மங்கை, மாடந்தைகளின் கொண்டாட்டங்கள்…

மணமக்களின் மகிழ்ச்சிகள்…

என எல்லாம் அரங்கேறும் அரண்மனை நான்…

அனைத்து அறிந்த தீயே…

மறந்தும் என்னை தழுவலாமா?

நொறுங்கியது நான் மட்டுமல்ல… கணக்கிலா இதயங்களும்தான்…

விரைவில் உன்னையும் அழைப்போம்

இந்த இடத்திற்கு…

கணபதி ஹோமமாய்…

                                                                – தி சென்னை சில்க்ஸ்