இன்னமும் கல்யாணம் இல்லை…

கொங்குச்சீமை செங்காற்று

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை…

– சூர்யகாந்தன்

 

 

ததட்டுத்தடுமாறி எழுந்து நின்ற நமச்சிவாயம் கண்களைக் கையினால் தேய்த்தவாறு அங்குமிங்கும் விழித்துப் பார்த்தான்.

“என்னத்தைத்தேடுறே….?”

“ஒண்ணுமில்லெ. ‘ஒண்ணுக்குப் போயிட்டு வர்றே…”

“…அதுக்குத்தா எடம் தொழாவறியா ? அதோ…அந்தக் கிளுவை மரத்தடியில் போயி இருந்துட்டு வா…”

“ச் செரி..”

வடக்கே ஊர்ப்பக்கம் கட்டிடங்கள் மங்கலாகத்தெரிந்தன. வாகனங்களின் இரைச்சல் லேசாகக் கேட்டது.

“இப்ப நீ போயி ஊத்துனியே மூத்திரம் !அது கூட இந்தத் தொழிலுக்குப் பிரயோஜனப்படுது.தெரியுமா …? கேட்டா நம்புறதுக்கே நேரமாகும்”

“எப்பிடி அது? தமாஷ் பண்றியா மாரி…?

“தமாசெல்லாம் இல்லெ.நெசந்தா.தொரையானெ வேணும்னாலும் கேட்டுப்பாரு. ஊறல்லெ நல்லா நொரைவரோணுங்கிறதுக்காக நவச்சார உப்பு ரெவ்வெண்டு பொட்டலங்க கொட்டுவோம்.அந்த உப்பைக் காய்ச்சிவிக்கிறவிக என்ன பண்ணுவாங்களாமா… ராத்திரி ஊரு அடங்குனதுக்கப்பறம் டிச்சு ஓரங்கள்லயும்,தெருவோரங்கள்லயும் தொடப்பத்தைப் போட்டுக் கூட்டி சாக்குல வழிச்சு மண்ணெச் சேகரிப்பாங்க. அந்த மண்ணுல             போறவிக வர்றவிக ஊத்துன மூத்திரம் படிஞ்சிருக்கும்! அந்த மண்ணெ நல்லா சல்லடை போட்டு சலிச்சு எடுத்தாக்க உப்பு தனியா ஒதுங்கும். அந்த உப்பையும் இன்னமும் சில பொருட்களையும் சேர்த்தி கலவை பண்ணினாக்க கெடைக்கிறது தான் இந்த நவச்சாரக் கட்டிக! இப்பத்தெரிஞ்சுதா? இங்கெ நாங்க காய்ச்சுற சரக்குல எத்தனெ  வகையான சாமானங்கெல்லாம் சேருதுன்னு…”

–              சொல்லிவிட்டு எகத்தாள மாய்ச்சிரித்தான் அவன்.

நமச்சிவாயத்துக்கு அடி வயிற்றை என்னமோ கலக்கியது போல் தோணியது. கூடவே போதையும் அசத்தியது. வாந்தி வருவதற்குண்டான குமட்டல் தொண்டை வரையிலும் எட்டிப்பார்த்தது. முயன்று அடக்கிக்கொண்டான்.

“…என்னப்பா பயந்துட்டியா? நாம இப்பக் குடிச்சது ஸ்பெசல் சரக்கு. இதுல அதெல்லாம் நாங்க போடுலெ…! முச்சூடும் பழங்கள்தான் ! கோயமுத்தூர்க்கடை வீதியிலெ வாங்குன  பழங்களேதான் ! பயப்படாதே. உன்னெ  ஒண்ணும் பண்ணீராது!”

மேலே மேகக்கூட்டம் மலை முகடுகளை நோக்கி நகர்வது தெரிந்தது.கழுகுகள் தூரத்திற்கொன்றாக வட்டமிட்ட படி இருந்தன.

‘அட…அதுக்குள்ளெ ஆளு அசந்து போயிப்படுத்தக்கா? இன்னும் கொஞ்சம் தண்ணி போடப்பா …”

நமச்சிவாயத்தை எழுப்ப வேண்டாம் என்று மாரியைக் கையமர்த்தினான் பாலுத்தொரை!

“இல்லெ! என்னமோ இவன்கிட்டச் சொல் லோணும்னு நெனச்சுட்டே இருந்தவன் மறந்துட்டேன் பாரு!”

“என்னது அது? பிராந்திக் கடையில கூட்டுச்சேர்றதைப் பத்தியா?”

“அதில்லெ …“

“பின்னெ …எது?”

“இப்பத்தா ஞாபகம் வருது.இவந்தம்பிகாரன் இருக்கானில்ல.”

“ஆமாஞ்சொல்லு.அவனுக் கென்ன?”

“..அவன் இப்ப அடிக்கொருக்கா தெக்காட்டுப்பக்கம் வந்து சரோஜாளுக்குப் பாடம் சொல்லிக் குடுக்குறானுங்கிரே! நானும் அதையப் பார்த்த அன்னெய்க்குப் புடுச்சு இவங்கிட்ட   கேக்கோணும்னே தா இருக்கறேன். அதுதா…”

பேசியபடியே அவனும் கோணிச்சாக்கை  மடித்து தலைக்கு வாகாக வைத்தபடி படுத்தான். போதை அளவாக இருந்தது.

சாராயத்தை  டியூப்பில் ஊற்றி இறுக்கிக்கட்டி வைத் தாயிற்று.

வியாபாரிகளுக்கு ஒட்டு மொத்தமாகக் கொடுத்துவிட அது போதுமானதாக இருக்குமெனக் கணக்கிட்ட படியே பிளாஷ்டிக் கேன்கள் இரண்டிலும்  மீதமிருந்த சரக்கை ஊற்றி மூடிவைத்தான் பாலுத்தொரை

டவுசர் பாக்கெட்டில் இருந்த பீடியை எடுத்து அடுப்பில் சுள்ளிக்குச்சியால் பற்றிக்கொண்டான். புகையை ஊதிய படியே உடம்பை வளைத்து தின வெடுக்கிற மாதிரி முன்னும் ,பின்னும் வளைத்த போது ‘சரக் சரக் சரக் ‘என மேபுறத்து வேலில்கருகில் செருப்புச் சத்தம் கேட்டது.

ஜாக்கிரதையாகி தன்னை சுதாரித்துக் கொண்டு மாரியை முழங்கையில் தட்டினான்.சாராய  டியூப்பின்  மீது போர்வையை போட்டுவிட்டு ரெண்டு எட்டுத் தள்ளி பார்வையை கூர்மை யாக்கினான் .சற்றுத் தள்ளி எட்டியும் ,வல்லயமும் இருப்பதை நிதானித்துக்கொண்டு “யார்ரது?” என்று குரலைச் செருமியவாறு கேட்டான்.

“சரக்…சரக் “என்று சத்தம் நெருங்கி வந்தது

“நாந்தா…!’ பச்சைச் சேலையும், ரவிக்கையுமாக வந்து கொண்டிருந்தாள் மங்கா

“ஓ..நீதானா?”

“ஆமா…! பின்னெ ஆருன்னு பார்த்தீங்க! போலீசுனா ?”

கையில் பாட்டில் ஒன்றையும், வைத்திருந்தாள்.

“இல்லே! ஆரு இதுன்னு பார்த்தே! நீ இப்பிடி பச்சைப் பசேல்னுதுணி உடுத்தியிட்டு திடுதிப்னு வந்தா எனக்கு எப்பிடித்தெரியும்கிறே?”

என்றான் பீடிப் புகையை ஊதியவாறு

மங்கா, இவர்கள் சாராயம் காய்ச்சும் இடத்திலிருந்து ஒன்றரை மைல் மேற்கில் சீருக் குழிப்பள்ளத்தை ஒட்டினாற்போல் காட்டுச் சாலையில் குடியிருக்கிறாள்! கிணற்றில் தண்ணீர் இல்லை. அதனால் சொற்பமாகக் காட்டு வேளாண்மையைச் செய்து கொண்டு கறவைக்காக இரண்டு எருமைகளை வைத்துக் கொண்டு சிறுபண்ணையம் பண்ணுகிறாள்! இவளது அப்பன் காரனுக்கு வயதாகி விட்டது, ஒண்டிக் கட்டையான இவளுக்கு இன்னமும் கல்யாணம் இல்லெ

கிணற்றில் தண்ணீர் இருந்த போது, சாளையை அடுத்த பள்ளத்தின் வேலிக்கருகில் ஊறல் போட்டு கொஞ்ச நாள் இந்தக் கள்ளச்சாராயமும் காய்ச்சினாள், தொழில் முறையில் அப்போதிருந்து தான் இவர்களோடு பழக்கம்!

பேரூர் போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஒரு ராத்திரியில் சராயாங்காய்ச்சும் இடத்துக்கு வந்து சரக்கோடு இன்ஸ்பெக்டர் இவளைப் பிடித்துவிட்டார்.