சுற்றுச்சூழல் தினத்தைக் கலக்கிய கோவை, வேளாண் கல்லூரி !

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், சுற்றுச்சூழல் அறிவியல் துறையால் இன்று (5.6.17), சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

 

இவ்வாண்டு “நான் இயற்கையோடு” என்ற கருத்தை வலியுறுத்திக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் ஓய்வுப்பெற்ற ஆங்கிலப் பேராசிரியரும் பேச்சாளருமான முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு பேசினார்.

 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
முனைவர். கு.இராமசாமியும், சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், அண்ணா அரங்கத்தின் முன் வாகனப் புகைப் பரிசோதனை நிகழ்ச்சியை இன்று துவங்கி வைத்தனர்.

 

பொன்விழா அரங்கத்தில் விழா தொடர்ந்தது இயற்கை மேலாண்மை இயக்ககத்தின் தனி அலுவலர் து.ஜவஹர் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கு.இராமசாமி, முனைவர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், தலைமை வகித்தார். சு.ஆவுடைநாயகம் முனைவர், சுற்றுச்சூழல் துறையின் தலைவர் நன்றியுரை வழங்கினார்.

 

மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மிதிவண்டிப் பேரணியும் நடத்தப்பட்டது. இப்பேரணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு முழக்கங்களைக் கொண்ட அறிவிப்பு பலகைகளை ஏந்தியபடி மாணவர்கள் அண்ணா அரங்கம் முன் தொடங்கி இராபர்ட்சன் சாலை வழியாகச் சென்று மேற்கு சம்பந்தம் சாலை, புண்ணியகோடி வீதி, கெளலி ப்ரவுன் ரோடு, லாலி ரோடு, தாவரவியல் தோட்ட வாயில் வழியாகச் சுற்றுச்சூழல் அறிவியல் துறையை வந்தடைந்தது.

 

மேலும், புவி வெப்பமயமாதலைப் பற்றியும், எரிபொருள் சிக்கனத்தைப்  பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று பல்கலைக்கழகத்தினுள் கார்  நுழைய அனுமதியில்லை.  பல்கலைக்கழகம் சார்பாக “கார் ப்ரீ டே” (CAR FREE DAY) அனுசரிக்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியின் நிறைவாக பல்கலைக்கழக துணைவேந்தரும் சிறப்பு விருந்தினரும் நமது நாட்டு மரங்களான வேங்கை, இலுப்பை, மகிழம், மற்றும் புங்கம் மரங்களை நட்டனர். மேலும் மறைந்த முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவே அவர்களின் நினைவாகவும் மரக்கன்று நடப்பட்டது.