கேஸ் போடுங்க சீல் வையுங்க…

நகைச்சுவை உணர்வு என்பது எல்லோருக்கும் கிடைத்து விடாது. ஒரு சில மனிதர்களுக்கு மட்டும் தான் இருக்கும். நமக்கு பிடித்தவர்களோ அல்லது சினிமா மற்றும் நாடகத் துறையில் நகைச்சுவை உணர்வோடு பேசக்கூடியவர்களின் நடிப்பைப் பார்த்து நமது சோகங்களை மறந்து சிரிக்கிறோம். மனிதனை சந்தோசப்பட வைக்கும் மனிதர்கள் எல்லோரும் தெய்வத்திற்கு சமம் என்று சொல்லுவார்கள். நம் தமிழ் சினிமாவிலும் பல நகைச்சுவை நடிகர்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவரான எஸ்.வி.சேகர் நம் ‘தி கோவை மெயிலுக்கு’ அளித்த சிறப்பு பேட்டி:

நகைச்சுவை உணர்வு உங்களுக்கு எப்படி வந்தது?

வாழ்க்கையில் எல்லாமே நமக்கு பிடிச்சமாதிரிகிடைக்கும்னு சொல்லிவிட முடியாது. நமக்கு பிடித்தவர் சி.எம். ஆகணும்னு நினைக்கிறோம். ஆனால் வாரத்துக்கு மூணு சி.எம்.மாறினால் நாம என்ன பண்றது-? எங்க அப்பா அடிக்கடி சொல்லக் கூடியது வாழ்க்கையில் எப்பவும் சந்தோசத்தை மட்டும் பார்க்க வேண்டும் என்று. அந்த நிமிடத்தில் இருந்து என் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும் நகைச்சுவை உணர்வுகள் வர ஆரம்பித்தது. அது எனக்கு கடவுள் கொடுத்த வரபிரசாதம்.

தற்பொழுது தமிழ் சினிமா எப்படி இருக்கின்றது?

தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த அளவுக்கு, கதை அம்சமுள்ள படங்கள் வருவது குறைந்து விட்டது.

திரையரங்குகளில் டிக்கெட் விலை அதிகமாக இருக்கின்றது என்று மக்கள் கூறுகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து?

முதலில் நாம் சரியாக இருக்க வேண்டும். டிக்கெட் விலை அதிகமா இருந்தா போகாதிங்க. தியேட்டர் மேல கேஸ் போடுங்க. சீல் வையுங்க. டிக்கெட் விலை அதிகமா இருக்குனு திருட்டு வி.சி.டி. வாங்கி பார்ப்பீர்களா? தங்கம் விலை ஏற்டுச்சுனு நாம போய் கொள்ளை அடிக்க முடியுமா? படத்துல ஆபாசக் காட்சிகள் வந்தால் ஏ சர்டிபிகேட் கொடுக்கறாங்க. நம்ம மக்கள் குழந்தைகளைக் கூட்டிட்டு போயிட்டு, அப்புறம் சினிமாவையும், தியேட்டரையும் தப்பு சொல்வது சரியில்லை. திருட்டு வி.சி.டி. விற்பவர்களுக்கு என்ன தண்டனையோ, வாங்கி பார்ப்பவர்களுக்கும் அதே தண்டனை கிடைக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜெயிலில் இடப்பற்றாக்குறை ஆகிவிடும். பிடித்த சினிமாவைப் பாருங்கள். பிடிக்காத சினிமாவைப் பார்க்காதீர்கள். ஏன் முதல் நாளே போய் காசு அதிகமா குடுத்து பாக்குறீங்க. ஒரு வாரம் கழிச்சு போனா, ஹீரோயின் என்ன வில்லன கல்யாணம் பண்ணிட்டு போயிருவாளா? எதுக்கு எடுத்தாலும் சினிமாக்காரர்களை குத்தம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ் நடிகர் சங்கம்?

புதுசா இளைஞர்கள் அணிகள் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வாக்குறுதியளித்த கோரிக்கைகளை நிறைவேற்று வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

பெண்களின் மீதான பிரச்னைகள்?

சமீபத்தில் ஒரு நடிகைக்குக்கூட பாலியல் பிரச்சனை நடந்தது. அப்பக்கூட கேட்டாங்க, ஒரு நடிகைனா மட்டும் அதை பெரிசா காமிக்கறாங்க. நாட்டில் பல பெண்கள் பாதிப்பு பத்தி பேசறது இல்லைனு. ஒரு நடிகைக்கு நடந்த பிரச்னையா அதை நாம பார்க்கக் கூடாது. பெண் சமுதாயத்துக்கு நடந்ததாகக் கருதி அதை நாம தட்டிக் கேட்கணும். ஒரு சிறு பெண் குழந்தைகூட பாலியல் தொல்லைக்கு பலியாகிறது. சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக இருக்க வேண்டும்.

விவசாயம் தற்போது இருக்கும் சூழலில் இருந்து மீள எப்பொழுது நல்ல தீர்வு கிடைக்கும்?

இதற்கு இந்த அரசாங்கங்கள் விரைவில் தீர்வு காண வேண்டும். அப்படி எடுக்கத் தவறினால் தமிழ்நாடு நம்மிடம் இல்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்னை தலை தூக்கிவிட்டது. ஒரு டன் அரிசிக்கு எத்தனையோ தண்ணீர் தேவைப்படுகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். மக்களுடைய நலன் கருதி இதற்கு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

ஜல்லிக்கட்டின் பொழுது சினிமா நடிகர்கள் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது பற்றி உங்கள் கருத்து?

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது மாணவர்களால் தொடங்கப்பட்ட விஷயம். ஒரு சாதாரண மனிதர்களாகத்தான் நடிகர்கள் அங்கு சென்றார்கள். முதலில் சினிமா நடிகர்கள் வரக்கூடாது என்றார்கள். பிறகு ஏற்றுக்கொண்டார்கள். ஏன் லாரன்ஸ், ஆதி, ஆரி இவர்கள் நடிகர்கள் இல்லையா? சில சமூகக் குற்றவாளிகள் செய்த வேலை போராட்டத்தில் பிரச்னை வரகாரணமாக இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகளில் சினிமாக்காரன் என்று யாரும் கிடையாது. எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோருக்கும் தமிழ் உணர்வுகள் இருக்கின்றது, யாரும் இதை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம்.

தற்போதைய நாடகத் துறையின் வளர்ச்சி?

நாடகத்துறையில் இருந்து வந்து பல சாதனைகளைப் புரிந்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது நம் தமிழ் மக்களுக்கே தெரியும். ஒரே விஷயம், இளைஞர்கள் மேடை நாடகங்களில் நடித்து அதில் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டு தமிழ் படங்கள் பண்ண வேண்டும் என்பது என்னுடைய ஆசை. படம் எடுப்பதற்கு முன்பே திரைக்கதையின் அம்சத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களைக் கவர்ந்த மனிதர்?

எங்க அப்பாதான். எனக்கு ஒழுக்கமும், வாழ்க்கையில் நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்தவர். வானொலியில் பணியாற்றியவர். ரோஜா படத்தில் அரவிந்த்சாமியோட பாஸா வருவார். அவர் எங்கள் குடும்பத்தின் கதாநாயகன் என்று கூட சொல்லலாம். ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

தமிழ்நாட்டு அரசியல்?

நமக்குப் பிடித்த ஆட்சி அமைய வேண்டும் என்று நாம் முயற்சி செய்து கொண்டு இருக்கின்றோம். காலமும், நேரமும் அதற்கு பதில் சொல்லும். எல்லாத்தையும் நாம் தப்பு சொல்ல முடியாது. யாராக இருந்தாலும் ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

சினிமாவில் நடிகனாக உள்ள மகனுக்கு தந்தையாக உங்களுடைய அறிவுரை?

என் மகன் அஸ்வின் சமீபத்தில் மணல் கயிறு 2 ஆம் பாகத்தில் கதாநாயகனாக நடித்தார். என் தந்தை எனக்குக் கொடுத்த சுதந்திரத்தைவிட அதிகமாக அவருக்கு நான் கொடுத்திருக்கிறேன். ஒரு நடிகன், எப்போதும் அப்படத்தின் இயக்குநர் சொல்வதைக் கேட்க வேண்டும். வரும் காலங்களில் மக்களைக் கவரும் வகையில் வளர வேண்டும்.

தமிழக மக்களுக்கு சொல்ல விரும்புவது?

கடவுள் கொடுத்த வாழ்க்கையை வீணாக்காமல் மனதில் நல்லதை நினைத்துக் கொண்டு நம்மைச் சுத்தி இருக்கிறவங்களை சந்தோசமா வச்சுக்கணும். பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். டாக்டர், இன்ஜினியர் படிக்க வேண்டும் என்று சொல்வதைத் தவிர்த்து, கற்கின்ற கல்வியே முக்கியம் என்று புரிய வைக்க வேண்டும். நம் சமுதாயத்திற்கு பயனுள்ள மனிதர்களாய் இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் கூறிக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

– பாண்டியராஜ்.