‘வழி’யில்லை மழைநீருக்கு

முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறை நாகப்பட்டினத்தில் புயல், சென்னையில் வெள்ளம் என்று செய்திகள் வரும். ஆனால், இப்போது அப்படி அல்ல கிட்டத்தட்ட ஆண்டு தோறும் ஆடி போய் ஆவணி வருவது போல தவறாமல் புயலும் வெள்ளமும் வந்துகொண்டே இருக்கிறது, எங்கே எப்போது என்பதுதான் செய்தி. பேரிடர் மேலாண்மை என்ற புதிய துறை உருவாகி அதன் பணிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இதில் பெரும் பொறுப்பு வகிப்பது உள்ளாட்சி அமைப்புகள் தான். ஆனால் பல நேரங்களில் அவை தங்கள் கடமைகளைச் சரியாக செய்யாததுபோலவே தோன்றுகிறது.  மழை நீர் வெள்ளமாக மாறி, வீணாக எங்காவது போய்ச் சேரும். நீரை சேமிக்கவும் முடியாது என்ற நிலை நீடிக்கும். அதுவே மூன்று மாதம் கழித்துப் பார்த்தால் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் குடிநீருக்கு ரோடு ரோடாக அலைவார்கள், தண்ணீர் லாரிகள் பறக்கும், கேன் வாட்டர் வணிகம் கொடி கட்டி பறக்கும்.  எவ்வளவு சிரமப்பட முடியுமோ தண்ணீருக்கு அவ்வளவு சிரமப்படுவோம், பிறகு மறுபடியும் மழைவரும் மறுபடியும் இதே மாதிரி செய்வோம்.

எடுத்துக்காட்டாக கோயம்புத்தூரில் நல்ல மழை பெய்து குளங்கள் எல்லாம் நிரம்பி உள்ளன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வடகிழக்கு பருவமழை இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இப்போதே குளங்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. இப்போது நிரம்பியுள்ள குளங்களில் நீர் மேலாண்மை செய்ய முடியும் என்று பார்த்தால் பெரிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதற்கு காரணம் நீர்வழி பாதைகளிலும், நீர் நிலைகளிலும் நாம் பராமரிக்கும் விதமும் சரியான திட்டமிடல் இன்மையும் தான் என்று தோன்றுகிறது.

கோவை பெரியகுளத்தில் இருந்தும், இன்னும் இரண்டு மழைநீர் வாய்க்கால்களில் இருந்து  வாலாங்குளத்துக்கு நீர் வருகிறது. அந்த குளம் நிரம்பி வழிந்தால் அடுத்தது அதில் இருந்து வழியும் நீர் சங்கனூர் பாலத்திற்கும் சிங்காநல்லூர் குளத்துக்கும்  போக வேண்டும். ஆனால் அதற்கு சரியான பாதை இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். லட்சக்கணக்கில் செலவு செய்து குளத்தை தூர்வாரி டைல்ஸ் போட்டு அழகு செய்வதைவிட குளத்துக்கு தண்ணீர் வருகின்ற, வெளியேறுகின்ற வழிகளை முறையாக பராமரிப்பதுதான் முக்கியம்  என்று தோன்றுகிறது.

இந்த ஆண்டு சில நாட்களுக்கு முன்பு பெரிய குளத்திற்கு நீர் அதிகமாக வருகிறது என்று சொல்லி, நீர் வரும் வழியில் உள்ள வாய்க்காலை உடைத்து வயலுக்கு நீர் போகும் வழி செய்யப்பட்டிருக்கிறது. வரலாறு காணாத மழை பெய்து சிக்கல் ஏற்படும்போது இப்படி செய்வது சரி. மழை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது இன்னும் பல நாட்களுக்குத் தொடரும் போது என்ன செய்யப் போகிறோம். இதன் தொடர்பாக ஏற்படும் வெள்ள சேதங்களுக்கு யார் பொறுப்பேற்று நஷ்டங்களை சரி செய்வது? நாடு இருக்கும் நிலையில் மக்களின் பொருளாதார நிலை இருக்கும் நிலையில் பணத்தை இது போன்ற சேவைகளுக்காக தான் செய்யப் போகிறோமா?

மழை நீரோ, பணமோ அதனை சரியாக கையாளுவதும் சேமிப்பதும் தான் நல்லது. நீர் மேலாண்மையை சரியான முறையில் செய்வது அனைவருக்கும் நல்லது. ஏற்கனவே வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும், நகரமான காரணத்தாலும் மக்கள் தொகை அதிகமுள்ள காரணத்தாலும், மழை அளவு குறைந்து இருப்பதாலும் தமிழகத்திற்கு அதிகமான நீர் தேவை இருப்பதை அனைவரும் அறிவார்கள். சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் நீருக்காக கையேந்தி,  அது தொடர்பான வழக்குகளும் சிக்கல்களும் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய பகுதியில் பெய்யும் மழை நீரைச் சேமிக்க வேண்டியது நம்முடைய முதல் கடமையாகும்.

இந்த முதல் கடமையை செய்வதற்கு நம்முடைய முன்னோர்கள் செய்த பேருதவி குளங்களும், குட்டைகளும்,  வாய்க்கால்களும் ஆகும் என்பதை மறந்து விடக் கூடாது. அவற்றை சரியான முறையில் பராமரித்து நீர் மேலாண்மையைச் செய்யும்பொழுது மழை வெள்ளமோ அல்லது வறட்சியோ அதனை எதிர்கொள்ள முடியும். வளர்ந்த நாடுகளைப் போலவே நம்முடைய நாடு மாறுவதற்கு இது உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி என்பது வண்ண விளக்கு அலங்காரங்களும், கான்கிரீட் தோரணங்களும் அல்ல. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுடைய குடிநீர் தேவைக்கும் சீரான போக்குவரத்து போன்ற தேவைகளுக்கும் உட்கட்டமைப்பு வசதிகளை சரியான முறையில் அமைத்து வாழ்வதே ஸ்மார்ட் சிட்டி என்று பொருள்படும். அதைவிடுத்து தேவையற்ற வழிகளில் பணத்தை செலவு செய்து தேவைக்கான செலவுகளுக்கு பணம் இல்லாமல் எப்பொழுதும் தவிர்கக்கூடாது.

மழைக் காலம் வந்திருக்கிறது. மழை நீரை சேமிப்பது என்பது நீர் மேலாண்மைக்கு மிகச் சிறந்த உதவியாக இருக்கும். குடிநீர் தேவைக்கும், நிலத்தடி நீர் மேம்படுவதற்கும், விவசாயத்துக்கும் என்று பல வகையிலும் தேவைப்படும் நீரை இயற்கை வழங்குகிறது. நீரை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதற்கு நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த குளங்களும் குட்டைகளும் வாய்க்கால்களும் இருக்கின்றன. அவற்றின் மூலமாக உலகத்திற்கு வழிகாட்டக் கூடிய நீர் மேலாண்மை செய்பவர்களாக நாம் மாறுவோம்.