கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கருத்துப்பட்டறை: “பெண்களுக்கான மாநில கொள்கை உருவாக்கப்படும்”

பெண்களுக்கான மாநில கொள்கை உருவாக்குதல் தொடர்பான நான்காவது கருத்துப்பட்டறை கற்பகம் உயர்கல்விக் கழக வளாகத்தில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் முன்னிலையில், சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை, இயக்குநர் ரத்தினா தலைமையில் நடைபெற்றது.

வரவேற்புரை ஆற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர், பெண்களது பிரச்சனைக்குரிய தீர்வுகளை பிரச்சினைகளை சந்திக்கின்ற பெண்கள் மூலமே பெறுவதே சரியான வழிமுறையாகும்.

அந்த வகையில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்துள்ள பெண்களது கருத்துக்கள் இக்கருத்துப்பட்டறையில் பெறப்பட்ட மாநில கொள்கை வரைவு உருவாக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முயற்சி என தெரிவித்தார்.

தலைமையுரையாற்றிய இயக்குநர் ரத்தினா, அரசின் நலத்திட்டங்கள் பல பெண்களது நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது எனினும் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்புடன் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் மாநில அளவில் உருவாக்கப்படும் பெண்களுக்கான புதிய கொள்கையானது பெண்கள் நலன் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கென செயல்படும் அனைவரது மேலான கருத்துக்களும் பெறப்பட்டு திட்டங்களிலுள்ள இடைவெளிகளை நிரப்பிவிடும் வகையில் சிறப்பான முறையில் உருவாக்கப்பட உள்ளது.

சம உரிமை, சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நிலையிலும் உள்ள பெண்களது நலன் சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய பெண்களுக்கான மாநில கொள்கை உருவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.