தமிழ் சினிமாவில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ‘கவிஞர் கண்ணதாசன்’

தமிழ் சினிமாவை  தனது எழுத்தின் மூலம் செம்மைப்படுத்தி இன்று வரையும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஆகப்பெரும் எழுத்தாளர் தான் கவிஞர் கண்ணதாசன். தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ கவிஞர்களை பார்த்திருந்தாலும், அத்தனை பேருக்கும் முன்னோடி என்றால் அது கண்ணதாசன் தான்.

தனது 16 வயதிலேயே எழுத்துப்பசிக்கு தீணி போட ஆரம்பித்த கண்ணதாசன் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள், 5000க்கும்  மேற்பட்ட பாடல்கள், பல்வேறு கட்டுரைகள், கதைகள், புத்தகங்களை எழுதியுள்ளார்.  1949 யில் வெளியான ‘கன்னியின் காதலி’ என்ற படத்தில் வரும் ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடல்தான் தமிழ் சினிமாவில் இவருக்கு முதல் பாடல். அன்று முதல் அடுத்த 40 வருடத்திற்கு தமிழ் சினிமாவை தனது எழுத்துக்கள் மூலம் அழகுபடுத்தினார் கண்ணதாசன்.

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை அனைத்து சூழலுக்கும் பாடல்களை எழுதி கடைசி பாடலாக மூன்றாம் பிறை திரைப்படத்தின் ‘கண்ணே கலைமானே’ எனும் பாடலை எழுதியுள்ளார். எம்.எஸ்.வி-க்கு ஒரு பாட்டு எழுதி கொடுத்துவிட்டு, இதுதான் எனது கடைசி பாடல் கூறியுள்ளார் கண்ணதாசன். ஆனால், அன்றைய தினமே ‘மூன்றாம் பிறை’ படத்திற்காக பாடல் எழுதுமாறு இளையராஜாவும், பாலு மகேந்திராவும் கேட்க அரைமணி நேரத்தில் ‘கண்ணே கலைமானே’ எனும் பாடலை எழுதிக்கொடுத்துள்ளார்.

அதன் பின் அடுத்த ஒரு ஆண்டில் அதாவது 1982ல் மரணம் எனும் தூது வந்து கண்ணதாசனை அழைத்துச் சென்றது. அவர் பிரிந்து 40 வருடங்களுக்கு மேலாகியும் இன்று வரை ரேடியோ, டீவி, சோசியல் மீடியா என எங்கும் அவரது தத்துவ பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.