மாநகராட்சி வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்தல்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் மாமன்றக் கூடத்தில், வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கூட்டம் வியாழக்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலர்/ஆணையாளர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.

நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 98 மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023யின் படி, ஒன்பது உறுப்பினர்களை இந்த குழுவிற்கு தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், பத்து உறுப்பினர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

மேலும், தேர்தலில் மொத்தம் எழுபத்தி நான்கு உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களான கற்பகம், குமுதம், சரவணக்குமார், சாந்தி, சுமா, சுமித்ரா, பேபிசுதா, பொன்னுசாமி, ராஜ்குமார் ஆகியோர்களுக்கு மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்/ஆணையாளர் மு.பிரதாப் சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார் , துணை மேயர் வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.