ராஜலட்சுமி கல்லூரியில் அதிநவீன ஐடியா ஆய்வகம் திறப்பு

சென்னை, தண்டலத்தில் உள்ள ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) திட்டத்தின் கீழ் ஐடியா ஃபேக்டரி (Idea Factory) என்ற அதிநவீன ஐடியா ஆய்வகம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கம் மேகநாதன் மற்றும் துணைதலைவர் அபய் மேகநாதன் தலைமை வகித்தனர். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி “கிரிஸ்” கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய செயலிகள், உபகரணங்கள், பாகங்கள் மற்றும் சாதனங்களோடு 30,000 சதுர அடி அளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பான ஆய்வகத்தில் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்களது அறிவியல் திறனை, செய்முறை ரீதியாக சிறப்பாக வளர்த்துக்கொண்டு தங்களை தாங்களே மேம்படுத்திக் கொள்ள முடியும். மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப சமுதாயத்திற்கு தங்களது கண்டுபிடிப்பு திறன்களை மேம்படுத்த அவர்களை இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள மேக் இன் இந்தியா (Make in India) திட்டத்தின் கீழாக தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே இந்த ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த தொழில்நுட்ப மையத்தில் மாணவர்கள் டிஜிட்டல் முறையில் ஆக்மென்டெட் ரியாலிட்டி (AR), வெர்ச்சுவல் ரியாலிட்டி (CR), மிக்ஸட் ரியாலிட்டி (MR), ஆகியவற்றை உபயோகித்து நடைமுறையில் புதுமையான சாதனங்கள் மற்றும் செயல்முறைகளை எளிதாக உருவாக்க முடியும். இந்த ஆய்வகத்தில் புதிய ரக ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை உருவாக்குவது அடங்கிய பல தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய உயர் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற பிசிபி (PCB) மின்னணு சர்க்யூட்டுகளை வடிவமைத்தல் ஆகியவற்றில் மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். இங்கே உள்ள சாதனங்கள் மூலமாக 3டீ  ஸ்கேனிங், 3டீ பிரிண்டிங், லேசர் கட்டிங் மற்றும் சிஎன்சி இயந்திரங்களில் திறன் பட ப்ரோக்ராமிங் மற்றும் செயல்பாடு மேற்கொள்வதில் நல்ல பயிற்சி பெற முடியும்.

ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் இந்த ஆய்வகத்தை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி வருங்காலத்தில் சிறப்பான தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் சி.ஆர்.முத்துகிருஷ்ணன், எஸ்.என்.முருகேசன், கல்லூரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.