தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்ததுடன், இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை. நெடுந்தீவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்கள். கைதான 9 பேரும் மண்டபத்தை சேர்ந்த மீனவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. முன்னதாக, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த கிரீம்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 9-ந்தேதி கிறிஸ்து (வயது40), ஆரோக்கிய ராஜ்(45), ஜெர்மஸ்(33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (25), ஜெகன்(40), பிரபு(36), மெல்டன்(45) ஆகிய 8 மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதேபோல் ராமேசுவரத்தை சேர்ந்த பாலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பிரியன் ரோஸ்(44), கார்ச்(30), அந்தோணி(45), பிரதீபன்(35), ஈசாக்(25), ஜான்(30), ஜனகர்(32) ஆகிய 7 மீனவர்களும் அன்றைய தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும் எல்லைதாண்டி வந்ததாக கூறி மேற்கண்ட 15 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இவர்கள் இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்தும், அவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரத்தில் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் சிறைபிடிக்கப்பட்ட 15 மீனவர்களும் 21-ந்தேதி காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கஜபதிபாலன் 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த முறை விடுதலையான மீனவர்கள் மீண்டும் எல்லைதாண்டி வந்து கைது செய்யப்பட்டால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.