ஓட்டல் குடியிருப்பு தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள், மகளிர் தங்கும் விடுதி மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- கோவை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் பெயர்களை பயன்படுத்தி ஒருசிலர் மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கைது செய்து உள்ளோம்.

இன்னும் நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது.

எனவே அங்கு விரைவில் கண்காணிப்பு காமிராவை பொருத்த வேண்டும். அப்போதுதான் குற்றசம்பவங்கள் நடந்தால், குற்றவாளிகளை கைது செய்ய ஏதுவாக இருக்கும்.

கோவை மாநகரில் ஏராளமான கல்லூரி, தொழிற்சாலைகள் உள்ளன. எனவே வெளியூரில் இருந்து பலர் இங்கு வந்து தங்கி உள்ளனர். அவர்கள் பற்றிய முழு விவரங்களை நீங்கள் கேட்டுப்பெற வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும் கோவை விடுதிகளில் தங்கி உள்ள ஒருசிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்கள் குறித்த தகவல்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதற்காக நாங்கள் விரைவில் புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்த உள்ளோம். அதில் விடுதியில் அறை எடுத்து தங்குபவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அப்போதுதான் குற்ற சம்பவங்கள் ஏதாவது நிகழ்ந்தால், குற்றவாளிகளின் விவரங்களை முழுமையாக அறிய உதவியாக இருக்கும். இதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.