தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மாணவர்களுக்கு தொடர் வெற்றியை தரும்

-துணை ஆணையர் மதிவாணன்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களின் வரவேற்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் ராதிகா வரவேற்புரை ஆற்றினார். சங்கரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மற்றும் செயலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் மதிவாணன் கலந்துகொண்டார்.

சங்கரா கல்வி நிறுவனங்களின் இணைச்செயலர் மற்றும் அறங்காவலர் கல்யாணராமன், அறங்காவலர் பட்டாபிராமன், கல்லூரியின் இணைச்செயலர் சந்தியா ராமச்சந்திரன் மற்றும் துணை இணைச்செயலர் நித்யா ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் நிர்வாக அறங்காவலர் பேசுகையில், ஒழுக்கம், திட்டமிடல், உழைப்பு ஆகியவற்றால் மாணவர்கள் வாழ்க்கையில் உயரமுடியும் என்றும், கல்லூரியில் படிக்க வரும் மாணவர்களைச் சிறந்த மனிதர்களாக்குவது எங்களது கடமை என்றும் பேசினார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், சுதந்திரம், ஒழுக்கம், தன்னை தானே நல்வழிப்படுத்தி கொள்ளுதல், வாழ்க்கையில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை தீர்மானித்துக் கொள்ளுதல், எதிர்காலத்தில் என்னவாக போகிறோம் என்பதை இன்று முதல் மாணவர்கள் திட்டமிட்டு எதிர்காலத்தை நோக்கி வேகமாக விடாமுயற்சியோடு செயல்பட வேண்டும். தங்களுக்கு தெரியாததை தெரிந்து கொண்டு வெற்றியை நோக்கி பணிகளை செய்ய வேண்டும். அரசு வேலை வாங்குவது எளிமையானது என்றும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தொடர் வெற்றியை தரும் என்றும் பேசினார். மேலும் ஆபத்தானவகையில் இரண்டு சக்கர வாகனங்களை ஓட்டாதீர்கள். மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் வேகத்தை குறைத்தும், தலைக்கவசம் அணிந்தும் பாதுகாப்பான முறையில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் இந்நிகழ்வில் துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.