கல்குவாரி வேலை நிறுத்தத்திற்கு முடிவு வேண்டி பாஜக – வினர் மனு

கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக-வினர் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை, கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து வருகின்றனர். இதேபோல் கோவை தெற்கு பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 நாட்களாக கிரஷர் மற்றும் கல்குவாரி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோவையில் கட்டுமான வேலைகள் ஸ்தம்பித்து விட்டது. பல லட்சம் கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தற்போது கல்குவாரி வேலை நிறுத்தத்தால் கேரளாவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

ஆனால், நம் கோவையில் ஒரு யூனிட் ஜல்லி கூட கையிருப்பு இல்லை. நம்மிடம் ஒரு யூனிட் 2000 ரூபாய்க்கு வாங்கி கடத்திச் செல்லப்பட்ட கனிம வளம், தற்பொழுது நம்மிடம் ஒரு யூனிட் ருபாய் 5000 வரை திருப்பி விற்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்குவாரி மற்றும் கிரஷர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள்  மற்றும் கட்டிடக் கூலித் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரஷர் மற்றும் கல் குவாரி லாரி உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு மூல காரணமாக இருக்கும் கேரளாவிற்கு கனிம வள கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.