கோவை மாமன்ற கூட்டம் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றம் தெரியுமா?

கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். இதில் 26 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு :

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் மூலம், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்தினை சீர் செய்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் அரசு  அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியினை மேற்கொள்ள, தமிழ்நாடு நகர்புறவு கட்டமைப்பு நிதி சேவைகள் மூலம்  திட்ட ஆலோசகர்கள் தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டு திட்டறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகர சாலைகளில் நவீன தொழில்நுட்பம் மூலம் இணையதள வசதி மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி போக்குவரத்து மேலாண்மை மூலம் பொது மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருவாறு உட்கட்டை அமைப்புகளை மேம்படுத்த திட்டமிட்ட சாலைகளின் பாதுகாப்பினை உறுதி செய்து விபத்தினை குறைத்தல், அனைத்து வகையான போக்குவரத்துகளில் பயன்பாட்டினை அதிகரித்தல், சிறந்த போக்குவரத்து சாலைகள் மற்றும் அட்டவணைகளை திட்டமிட்டு வாகன நிறுத்தம் இடங்களை உருவாக்குதல், அதன் மூலம் வருவாயை ஈட்டி மேலாண்மை செய்தல், சுற்றுச்சூழல் மாசுப்படுதல் மற்றும் போக்குவரத்து நெரிசல்களை குறைத்து நகரிலுள்ள சராசரி பிரயாண நேரத்தை மற்றும் பயண நேரத்தை குறைத்தல் ஆகியவை ஆகும்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 88வது வார்டுக்கு உட்பட்ட செங்குளம் பகுதியில் இருந்து மழைக்காலங்களில் அதிக உபரி நீர் வெளியேறுவதால் மற்றும் மழைநீர் செல்வதற்கு வடிகால் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சோர்ந்து பெரும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொது மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளான அம்மன் கோவில் சாலை, குறிஞ்சி நகர், லவ்லி கார்டன், எஸ்.என்.ஆர். கார்டன், பிரண்ட்ஸ் அவென்யூ, வசந்தம் நகர், வசந்தம் கார்டன், கிளாசிக் பார்க், மகாராஜா காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றன.

இது குறித்து பல்வேறு நாளிதழ், ஊடகங்களில் செய்தி வெளியானது. சாலை மறியல் போன்றவைகள் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதனை மேயர், துணைமேயர், கமிஷனர், துணை கமிஷனர், கவுன்சிலர்களின் மூலம் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எனவே இந்த பகுதியில் சின்ன சுடுகாடு முதல் எஸ்.என்.ஆர் கார்டன் 1 வது வீதிவரையில் மழைநீர் வடிகால் அமைத்து மழைக்காலத்தில் செங்குளத்தில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ. 97 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் பழைய 60 வார்டுகளுக்கு ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புணரமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 377.13 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டது. பாதாள சாக்கடை திட்டப்பணி ஆறு சிற்பங்களாக பிரிக்கப்பட்டது.

ஒரு சிற்பத்தில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் 40 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் 50 சதவீத பணிகள் முடிவற்ற நிலையில் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளால் பணியை தடை செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் கடந்த 24. 8.2009 முதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 21.8 2017 மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டதால் பணியை மீண்டும் துவக்க உத்தேசிக்கப்பட்டது.

நன்றண்டாபுரம் பகுதியில்  கட்டுமான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. நிலையத்திற்கு பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் 16,791 எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சேகரிப்பு குழாய்கள் மற்றும் 21,23 7 எண்ணிக்கையிலான வீட்டு இணைப்புகள் மதில் சுவர் வரை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மதில் சுவர் வரை அமைக்கப்பட்ட வீட்டு இணைப்புகளை வீட்டின் மதில் சுவரின் உட்புறம் அமைத்து வீடுகளுக்கு பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறு வழங்கினால் கழிவுநீர் சேகாரமாகி சுத்திகரிப்பு நிலையம் முழு கொள்ளளவில் இயங்கும். மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படும்.

காப்புத்தொகை, மாத கட்டணம் வசூலிக்கலாம். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணைப்புகளை பெற்றுக்கொள்ள காலதாமதம் ஏற்படும் எனவே விரைவில் இணைப்பு வழங்கி வருவாய் அதிகரிக்க மாநகராட்சி இப்பணிகளை பொதுநிலையில் செய்வது குறித்தும், இச்செலவுத் தொகையினை வீட்டு உரிமையாளரிடம் 10 தவனைகளில் வசூலிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது போன்று பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் விவரம், கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பெற்ற பணிகளுக்கு ஒப்பந்ததாரர் அல்லது நிறுவனம் அல்லது சேவை நிறுவனம் நியமித்தல் தொடர்பான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க மாமன்ற கூட்டத்தில் அனுமதி கோரப்பட்டது. கவுன்சிலர்கள் பலரும் இது எங்களுடன் கலந்து ஆலோசனை செய்துவிட்டு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அந்த தீர்மானம் நிறைவேற்றாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மு. பிரதாப் பேசியதாவது: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் மேப் ஒன்று தயார் செய்துள்ளோம். அதில் எந்தெந்த மாநகராட்சி சாலைகள் எப்போது அமைக்கப்பட்டது, இதில் எந்த சாலைகள் எப்போது சீரமைக்கப்பட்டது, எங்கு புதிதாக சாலைகள் அமைக்க வேண்டும், எங்கு சாலைகளை சீரமைக்க வேண்டும், எங்கு போக்குவரத்து அதிகமாக உள்ளது, எந்த சாலைக்கு முக்கியத்துவம் கொடுத்து  பணியை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாலை பணிகளை முக்கியத்துவம் அடிப்படையில் விரிவாக அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.

மாநகராட்சியின் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு ரூபாய் 230 கோடி வரை நிலுவை தொகை வழங்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பல டெண்டர்கள் எடுக்க ஒப்பந்ததாரர்கள் முன் வரவில்லை. இதனால் ரி டென்டர்கள் விடப்பட்டு வந்திருந்த நிலையில் சொத்து வரி போன்றவை உயர்வு காரணமாக மாநகராட்சிக்கு நீதி வந்ததன் அடிப்படையில் தற்போது ரூ.230 கோடியில் இருந்து ரூபாய் 25 கோடி மட்டுமே நிலுவை உள்ளது.

எனவே தற்போது ஒப்பந்த பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சியின் நிதி தேவையின் அடிப்படையில் கடன்களுக்கு முன்னுரிமை அளித்து கொடுக்கப்பட்டு வருகிறது.