கோவை நீதிமன்றத்தில் தொடுதிரை!

வழக்கு விபரங்களை நீதிமன்றங்களுக்குள் சென்று பார்ப்பதை தவிர்க்கும் வகையில் வழக்காளிகளுக்காக கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விபரங்கள் அடங்கிய  தொடுதிரை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரங்களை  வழக்காளிகள் அவ்வப்போது சம்பந்தப்பட்ட  நீதிமன்றங்களுக்கு சென்றே அறிந்து கொள்ள வேண்டும்.இதனிடையே வழக்கு விபரங்கள் அண்மையில் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.ஆனால் இந்த முறையில் வழக்கு விபரங்கள் மறுநாளே பதிவேறரம் செய்யப்பட்டு வந்தன.இந்த நிலையில் கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கின் நிலை குறித்த தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.முன்னதாக அதன் செயல்பாட்டை துவக்கி வைத்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வழக்காளிகள் பயன்பெறும் வகையில் இந்த தொடுதிரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களது நேரம் விரையமாகுதல் தவிர்க்கப்படும் என்றும் கூறினார்.இந்த தொடுதிரையில் வழக்குகளின் விபரங்கள் மட்டுமின்றி தீர்ப்பாகும் வழக்குகள் குறித்த விபரமும் தீர்ப்பின் விபரமும் நீதிமன்றத்தில் நடைபெறும் அதே வேளையில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை வழக்காளிகள் காணலாம் என்றும் குறிப்பிட்டார்.கோவை நீதிமன்றத்தில் இரண்டு தொடுதிரை அமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக ஒரு தொடுதிரை துவக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மற்றொரு தொடுதிரை துவக்கப்படும் என்றும் கூறினார்.