கோவையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நினைவு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் நடைபெற்றது

கோயம்புத்தூர், அக்டோபர் 2, 2018 – தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் நினைவு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் இன்று கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் (காஸ்மோபாலிடன் கிளப் முன்பு) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.

இதன் துவக்க விழாவில் கோயம்புத்தூர் மாநகர காவல் துறை, துணை ஆணையாளர் (போக்குவரத்து) திரு.சுஜித் குமார் ஐ.பி.எஸ். அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கிவைத்தார். விழாவிற்கு கோயம்பத்தூர், ஏரோ டிரேடிங் நிறுவனத்தின், மேலாண்மை இயக்குனர் திரு. ஏ. எஸ். பகுத்தறிவு மோகன் அவர்கள் தலைமை தாங்கினார். கோயம்புத்தூர் மாவட்ட சைக்கிள் சங்கத்தின் செயலாளர் திரு. ஜே. கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தார்.

இந்த சைக்கிள் போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 2.5 கி.மீ தூரமும், 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 5 கி.மீ தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 7.5 கி.மீ தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 12.5 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெற்றது.

மாணவியர்களுக்கு 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் தனித்தனியாக இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு 2.5 கி.மீ தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் தனித்தனியாக இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு 5 கி.மீ தூரமும் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1,000 மற்றும் பதக்கமும், இரண்டாவது பரிசாக ரூபாய் 750 மற்றும் பதக்கமும், மூன்றாவது பரிசாக ரூபாய் 500 மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டது.

இந்த விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஏரோ டிரேடிங் நிறுவனத்தினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை பிரிவு மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல துறையுடன் இணைந்து செய்து இருந்தனர்.