ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள்!

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கடந்த 2014-ல் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்து, 175 உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 9 வது யோகா தினம் கடைப் பிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி, கோவை ஈஷா யோகா மையம் சார்பில், விமான நிலையம், ஆதியோகி, சூலூர் விமான படை தளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பயன் பெற்றனர்.

விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஆதியோகி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எஃப். படை வீரர்கள் பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர். அதேபோல், ஐ.என்.எஸ். அக்ரானி, விமான படை கல்லூரி, வெள்ளலூரில் உள்ள சிறப்பு அதிரடிப் படை வளாகம் போன்ற இடங்களில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.

இதனைத் தவிர, கற்பகம் கல்லூரி, இந்துஸ்தான் கலை கல்லூரி, எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள்  இலவசமாக யோகா கற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளில் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட யோக நமஸ்காரம், நாடி சுத்தி போன்ற பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 1ஆம் தேதி முதல் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புகள் இம்மாதம் முழுவதும் நடத்தப்படும்.

உங்கள் இருப்பிடத்திலேயே யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள் Isha.co/idysessionrequest என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.