கோவையில் மருத்துவ படிப்பிற்கு 78 அரசு பள்ளி மாணவர்கள் தகுதி

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மருத்துவம் படிக்க விரும்பும் 200 மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவசமாக நீட் தேர்வு பயிற்சிகள் தரப்பட்டன. அதன்பிறகு அவர்கள் தேர்வு எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 78 பேர் மருத்துவ படிப்புக்காக இடஒதுக்கீட்டின்கீழ் தகுதி பெற்று உள்ளனர்.

அதிலும் குறிப்பாக கோவை மாவட்டம் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பிரசன்னதேவி என்பவர், நீட் தேர்வில் 720-க்கு 396 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் எனக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசை இதற்காக இரவும் பகலும் கஷ்டப்பட்டு படித்தேன். எனக்கு கடந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 550 மதிப்பெண்கள் கிடைத்தது.

ஆனாலும் நீட் தேர்வில் 155 மதிப்பெண்களே கிடைத்தன. எனவே நடப்பாண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதுவது என்று முடிவு செய்தேன். இதற்காக கஷ்டப்பட்டு படித்து பரீட்சை எழுதினேன். இதில் எனக்கு 396 மதிப்பெண்கள் கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது. எனது தந்தை இறந்து விட்டார்.

தாயார் வாணீஷ்வரி, ஈஷா மையத்தில் தூய்மைப்பணியாளராக வேலை பார்க்கிறார். எதிர்காலத்தில் டாக்டராகி ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார். கோவை வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பொன்மணி கிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வில் 720-க்கு 390 மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

இவரது பெற்றோர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.