அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.

கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம், தொழிற்கூடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

எட்டு நாள்கள் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், கரூர் மண்மங்கலம் அருகேயுள்ள ராமேஸ்வரபட்டியில் இருக்கும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் தற்போது திடீர் சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு அமைந்திருக்கும் ராமகிருஷ்ணபுரத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேபோல, கரூர் வெங்கமேடு பகுதியிலுள்ள கருப்பணசாமி கோயில் தெருவில் அமைந்திருக்கும் சண்முக செட்டியார் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கியிருக்கின்றனர்.

மத்திய துணை ராணுவப்படை வீரர்களின் பாதுகாப்போடு இந்தச் சோதனையை அதிகாரிகள் தொடங்கியிருக்கின்றனர். தற்போது, மேற்குறிப்பிட்ட மூன்று இடங்களிலும் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.