அவிநாசி நாயக்கன் பாளையத்தில் திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கட்சிசார் பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு பகுதியான பல்லடம் உட்கோட்டத்திற்குட்பட்ட அவிநாசிபாளையம் காவல்நிலையத்திற்கு  உட்பட்ட கிராமபுற பகுதிகளில், தொடர்ந்து இரவு நேரங்களில் திருட்டு நடைபெற்றுகொண்டிருக்கிறது. கருங்காளிபாளையத்தில் கோவில் பூட்டை உடைத்து, உண்டியல் திருட்டு, அதேகிராமத்தில் மளிகை கடை ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருட்டு நடந்துள்ளது.

பணம் 15,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இது போன்ற திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில்தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து, அவிநாசி பாளையம் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தோம். புகாரை பெற்று கொண்டு புகார் மனு மீது, சி.எஸ்.ஆர்அல்லது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யாமல் உள்ளனர்.

திருடர்களை உடனடியாக பிடித்து விடுவதாக வாய்மொழியாக தெரிவித்து விட்டு, வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர். ஆனால் தொடர்ந்து திருட்டு நடந்துவருகிறது. திருட்டு தொடர்பான வழக்குகளை போலீசார் பதிவு செய்யாமல் இருப்பது பொதுமக்கள்மத்தியில் பலத்த சந்தேகத்தை உருவாக்கி வருகிறது.

இதனால் கிராமபகுதியில் பொதுமக்கள் மத்தியில் பயம் உருவாகியுள்ளது. தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து திருடர்களை பிடிக்கவும், குற்றவழக்குகளில் உடனடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.