அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் முப்பெரும் விழா!

கோவை மருதமலை அடிவாரம் பொதிகை ரெசிடென்சி திருமண மண்டபத்தில் அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கம் சார்பில் சுவாமி ஐய்யப்பன் பூஜை, அட்சயா ஆறுமுகம் படத்திறப்பு விழா, 73வது அகில இந்திய பொதுக்குழு மற்றும் தலைவர் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் என, முப்பெரும் விழா நடைபெற்றது. ஐய்யப்ப சேவா சங்கம் பம்பை மற்றும் ஐயப்ப சன்னிதானத்தில் இயங்கி வருகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் உலகெங்கும் கடும் விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தொண்டாற்றுவதே இந்த சேவா சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த அமைப்பிற்காக வருடந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஐய்யப்ப சுவாமி பூஜைகள் மற்றும் பொதுக்குழு நடைபெறும். 18 வருடங்களுக்கு பிறகு கோவையில் ஐய்யப்ப சுவாமி பூஜை, அட்சய ஆறுமுகம் படத்திறப்பு விழா, பொதுக்குழு மற்றும் தலைவர் நிர்வாக உறுப்பினர்களுக்கான தேர்தல் என முப்பெரும் விழாவாக, கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பொதிகை ரெசிடென்ஸி திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. சபரிமலையில் உள்ளது போல் ஐய்யப்ப சுவாமி மற்றும் 18 படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்ட இடத்தில் கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது.

ஐய்யப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அகில இந்திய தலைவர் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தங்கரதம் இழுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. அட்சயா ஆறுமுகம் நினைவரங்கில் அன்னூர் சண்முகம் குழுவினரின் பக்தி இன்னிசை நடைபெற்றது. ஐய்யப்ப சுவாமியை விநாயகப் பெருமான் ஆலயத்தில் இருந்து விழா மேடைக்கு மங்கள வாத்திய இசையுடன் எழுந்தருளச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. அகில பாரத ஐய்யப்ப சேவா சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த மறைந்த அன்னதானச்செம்மல் அட்சயா ஆறுமுகத்தின் நினைவையொட்டி அமைக்கப்பட்ட நினைவரங்கில் தேசிய தலைவரும் முன்னாள் எம்பியுமான தென்னலா பாலகிருஷ்ண பிள்ளை, ஆறுமுகத்தின் படத்தினை திறந்து வைத்தார். தேசிய துணைத்தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார்.

அகில இந்தியளவில் கலந்து கொண்ட தலைவர், செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான 73வது பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழுக் கூட்டத்தை அடுத்து தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு தலைமை தேர்தல் அதிகாரி கொலமக்கோடு ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தென்னலா பாலகிருஷ்ண பிள்ளை ஒரு மனதாக மீண்டும் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பல்வேறு பதவிகளுக்கான நபர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.