ஒடிசா ரயில் விபத்து எதிரொலி : கோவையில் என்ன நடவடிக்கை?

கோவை: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் உள்பட 3 ரயில்கள் மோதிக் கொண்டு பெரும் விபத்து ஏற்பட்டது.

நாடு முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சுமார் 280க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர். 1100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விபத்துக்கு முக்கிய காரணமாக இண்டர்லாக்கிங் சிஸ்டமில் தவறு, சிக்கனல் கோளாறு போன்றவைகள் காரணமாக சொல்லப்படுகின்றன.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுமார் 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக விபத்து நடந்த பகுதியில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து சம்பவம் ரயிலில் பயணிப்போர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகியவற்றை காட்டிலும் ரயில் போக்குவரத்தை மக்கள் அதிகம் விரும்புவார்கள்.

பொருளாதார ரீதியாகவும், வசதி மற்றும் பாதுகாப்பு ரீதியாகவும் ரயில் போக்குவரத்து இந்திய மக்களிடையே அதிகம் விரும்பப்படுகின்றன. இதனிடையே மக்களிடையே நிலவும் அச்சம் ஒருபுறம் இருக்க தென்னக ரயில்வே இங்கு ரயில் விபத்து நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக செயல்பட்டு வருகிறது.

தென்னக ரயில்வேயின் கீழ் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் சுமார் 727 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 505 ரயில்நிலையங்கள் உள்ளன. சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமாரி, பாலக்காடு, சேலம் போன்ற 100க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்கள் முக்கிய ரயில்நிலையங்களாக உள்ளன.

கோவை

கோவை ரயில்நிலையத்திற்கு தினமும் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. 20க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இதே போல் தமிழகத்தின் பல்வேறு ரயில்நிலையங்களிலும் நூறுக்கணக்கான ரயில்கள் வந்து செல்கின்றன.

ரயில் விபத்து சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில்நிலையங்கள், ரயில்வே தண்டவாளங்கள் போன்றவைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், ‘‘ ரயில்வேயில் விபத்து நடக்காமல் இருக்க தினமும் பராமரிப்பு பணிகள், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான சோதனைகள் 24 மணி நேரமும் எப்போதும் கண்காணிக்கப்படும். தென்னக ரயில்வேயின் கீழ் அனைத்து பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனைகள் எந்த வித சமரசமும் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன.

சில மனித அல்லது இயந்திர கோளாறுகள் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம். கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக அது கண்ட்ரோல் ரூம்க்கு தகவல் வந்துவிடும். உடனடியாக அந்த கோளாறு சரிசெய்யப்படும். தென்னக ரயில்வேயில் கண்டரோல் ரூம் முழுநேரமும் 365 நாட்களும் செயல்கின்றன.

அனைத்து விதமான குறைகளும் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சரிசெய்யப்படுகின்றன. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ரயில் பயணம் பாதுகாப்பு நிறைந்தது தான்,’’ என்றார்.

தெற்கு ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறுகையில், ‘‘ நாடு முழுவதும் சுமார் 160 கிலோ மீட்டர் அளவு வேகத்தில் ரயில்கள் செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான தண்டவாளம், தண்டவாள கட்டைகள் என மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தண்டவாளங்களில் தற்போது 60கிலோ எடை பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து ரயில்களிலும் கவாச் முறை கொண்டுவர வேண்டும்.

சிக்னல்கள் அனைத்தும் ஆட்டோமேட்டிக் செய்யப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் விபத்துகள் ஏற்படாதவாறு நவீன கட்டமைப்புகளை ரயில்வே துறை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பில் சமரசம் இன்றி பணிகள் மேற்கொள்ள வேண்டும். இது மக்களிடையே விபத்து குறித்த அச்சத்தை போக்க உதவும்,’’ என்றார்.

ரயில் நல பயணிகள் குழுவினர் கூறுகையில், ‘‘ ஒடிசா ரயில் விபத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்தோர் தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அப்பெட்டிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது தான். முன்பதிவு இல்லாத பெட்டிகள் இன்ஜின்களுக்கு அடுத்தவாறு அமைக்கபட்டிருக்கும்.

முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரித்தால் கூட்டம் நெரிசல் குறையும். மக்களிடையே ஏற்படும் அச்சத்தை போக்க ரயில்வே துறை எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மக்களிடையே தெளிவுப்படுத்த வேண்டும். ரயில்வே துறையில் அதிகம் தொழில்நுட்பங்கள் காலத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும். இது போன்ற விபத்து இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க ரயில்வே துறை அதிகம் கவனம் கொண்டு செயல்பட வேண்டும்,’’ என்றனர்.