கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு தொடரும் பள்ளம்.

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட் அருகே, சர்வீஸ் ரோட்டில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டது.

இதில், கிணத்துக்கடவு பகுதியில் கோதவாடி பிரிவு முதல் அரசம்பாளையம் பிரிவு வரை பாலம் அமைக்கப்பட்டது.

இதில் பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடும் அமைக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனகள் சென்று வருகின்றன. இந்நிலையில், டி. இ.எல்.சி., பள்ளி எதிரே அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பியுள்ளது. அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.இந்த பிரச்னையை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், மண் கொட்டி அவ்வப்போது சரி செய்யப்பட்டு வந்தது.

ஆனால் மீண்டும் மீண்டும் குழாய் உடைந்து, ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.இந்த ரோட்டை தற்காலிகமாக சரி செய்யாமல், நிரந்தர தீர்வு கான தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் குழாய் தரமின்றி இருந்தால், புதிதாக மாற்றி அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.