போலி முகநூல் கணக்கு மூலமாக மனைவியை இழிவு படுத்தியவர் கைது.

கோவை மே 27-

போலியான முகநுால் கணக்கு தொடங்கி மனைவியை இழிவுபடுத்திய கணவரை, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 21 வயது இளம்பெண், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து தாய் வீட்டில் வசிக்கிறார்.மனைவி மீதான ஆத்திரத்தில் அவரை பழி வாங்க எண்ணிய கணவர், போலியான முகநுால் கணக்கு ஒன்றை தொடங்கினார்.அதில், தன் மனைவி, அவரது பெற்றோர் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைத்துக் கொண்டு, ஆபாசமான வீடியோக்கள் மற்றும் படங்களை பதிவிட்டு வந்தார்.

கூடவே, தன் மனைவியின் மொபைல் போன் எண்ணையும் பதிவிட்டார்.பாதிக்கப்பட்ட பெண், உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரி, கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவுபடி விசாரித்த சைபர் கிரைம் போலீசார், இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன், 32, என்பவரை கைது செய்தனர்.அவரிடம் இருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட, 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தயங்காம புகார் குடுங்க!கோவை எஸ்.பி., வெளியிட்ட அறிக்கையில், ‘சமூக வலைதளங்களில் பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள், எந்தவித தயக்கமும் இன்றி போலீசாரிடம் புகார் அளிக்க முன் வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.