கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரியில் பயிற்சி வகுப்புகள்

இந்திய பதிவு பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை (TNAI -TN ) மற்றும் கே.எம்.சி.எச் செவிலியர் கல்லூரி இணைந்து அண்மையில் கோவை மாநகரத்தில் உள்ள 26 செவிலியர் கல்லூரியைச் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமை பண்பு முகம் பயிற்சி வகுப்புகள் செயல்முறை விளக்கத்துடன் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த பயிற்சி பட்டறையை ஆனி கிரேஸ் கலைமதி, பதிவு பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தலைவர் காணொலி வாயிலாக துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் செவிலியர் துறையின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு இளம் செவிலியர்கள் தலைமை பண்பை வளர்த்துக் கொள்வது அவசியத்தையும் அதற்கு ஏதுவான சூழ்நிலைகள் தற்போது நிலவுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பயிற்சி பட்டறையில் தகவல் தொடர்புத்திறன்கள், கூட்டு முயற்சியின் முக்கியத்துவம், தலைவருக்கு தேவைப்படும் பண்புகள் மற்றும் ஒழுக்க முறைகள், நேர்மறை சிந்தனை மற்றும் செயல்கள் முக்கியத்துவம் மற்றும் காலத்தின் அருமை உணர்தல் ஆகியவற்றை பற்றி தேர்ந்த பேச்சாளர்கள் மற்றும் பதிவு பெற்ற செவிலியர் குழுமத்தின் நிர்வாக அதிகாரிகளாக உள்ள விஜயலட்சுமி, உதயகுமார், ஜெயசுதா, ரீனா இவான்சி ஆகிய நிர்வாகிகள் பயிற்சி அளித்தனர்.

முகாமின் நிறைவு விழாவில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயலர் தவமணி தேவி பழனிசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரது உரையில் மனிதநேயத்துடன் கூடிய சேவை, விடாமுயற்சி, நேரம் தவறாமை, சிக்கலான காலகட்டத்தில் பொறுமையோடு செயலாற்றுதல் முக்கியத்துவத்தை விளக்கினார்.

இந்த விழாவில் பதிவு பெற்ற செவிலியர் குழுமத்தின் 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென் பிராந்திய தலைவர் ஜெயினி கெம்ப் தலைமை உரை ஆற்றினார். அவரது உரையில் எதிர்மறை சிந்தனையை ஒழித்து நேர்மறை சிந்தனையை உருவாக்குவதை பற்றி வலியுறுத்தினார்.