வலது இருதய செயலிழப்புள்ள பெண்ணை காப்பாற்றிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தமிழ்நாட்டில் மேற்குப்பகுதியில் முதல்முறையாக டிபிவிஆர் சிகிச்சை முறையில் வலது இருதய செயலிழப்புடன் வாழும் 36 வயது பெண் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

பிறவியிலேயே இருதயத்தில் அவருக்கு ஓட்டை மற்றும் நுரையீரல் குழாயிலும் ஒரு அடைப்பு இருந்தது. 3 வயதிலேயே அறுவை சிகிச்சை செய்து இருதயத்தின் ஓட்டை மூடப்பட்டது. நுரையீரலில் இருந்த வால்வு அடைப்பும் நீக்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு நுரையீரலில் வால்வுக் கசிவு இருந்து வந்தது. மேலும் ஆண்டுக்கு ஆண்டு இது அதிகரித்தும் வந்தது. அவருக்கு 35 வயதானபோது, இதயத்தின் வலது பகுதியில் செயலிழப்பும், கடுமையான நுரையீரல் வால்வுக் கசிவும் ஏற்பட்டது.

அவர், ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக பெற்றிருக்கிறார். இந்நிலையில் ஸ்ரீராமகிருஷ்ணாவில் பிறவி இருதயக் குறைபாடு மருத்துவத் துறை இருதய நோய் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்தனர்.

ஏற்கெனவே சிறுவயதில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் மேலும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும் இணை நோய்களான சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் பிரச்னைகளும் சவாலாக இருந்தன.

டாக்டர் எஸ்.தேவபிரசாத் மற்றும் குழுவினர், அவருக்குத் தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் முதல்முறையாக டிபிவிஆர் சிகிச்சையை கடந்த மார்ச் 24 ல் மேற்கொண்டனர். மிகவும் சிக்கலான சிகிச்சையாக இருந்தாலும், ரத்த நாளங்கள் வழியாக துளைத் திறவுகோல் (key hole) சிகிச்சையில் புதிய வால்வைப் பொருத்தினர். நோயாளியின் வலது கழுத்திலிருந்து செல்லும் ரத்தக் குழாய் வழியாக, பழுதடைந்த பகுதிக்கு செயற்கை வால்வை வெற்றிகரமாகப் பொருத்தினர்.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளி ஆறு நாட்களில் வீடு திரும்பினார். அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்னையும் படிப்படியாக குறைந்தது. அவரது இருதயமும் மருந்துகளின் கட்டுப்பாட்டுடன் மேம்பட்டு வருகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் பிறவி இருதயக் குறைபாடு அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் விஜய் சதாசிவம் மற்றும் குழுவினர், தேவையான உதவிகளை வழங்கினர். இருதய அறுவை சிகிச்சைக்கான மயக்கவியல் நிபுணர் டாக்டர் மேனன், டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அறுவை சிகிச்சையின்போது உதவினர். இருதய கேத்லேப் பணியாளர்கள், தீவிர சிகிச்சை பணியாளர்கள் நோயாளியை கவனமுடன் கவனித்துக் கொண்டனர். இவ்வாறு ஒட்டுமொத்த மருத்துவமனைப் பணியாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

துளை திறவுகோல் அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்படும் வால்வு,  அறுவை சிகிச்சைக்கான வால்வுக்கு இணையான வாழ்நாளைக் கொண்டது. டிபிவிஆர் (TPVR) எனப்படும், டிரான்ஸ்கத்தீட்டர் பல்மனரி வால்வு ரீப்ளேஸ்மென்ட் (Transcatheter Pulmonary Valve Replacement) நுரையீரல் வால்வு மாற்று துளை திறவுகோல் சிகிச்சை முறை முதல் முறையாக 2000ம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்பை திறந்து மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, துளை திறவுகோல் சிகிச்சை முறை, நுரையீரல் வால்வில் கசிவு ஏற்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு டிபிவிஆர் சிகிச்சை தரப்படுகிறது. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, மருத்துவமனையின் நிபுணத்துவத்தையும், இருதய சிகிச்சைப் பிரிவுக் குழுவின் அர்ப்பணிப்பு உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.