கோவை டிராவல் ஏஜெண்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் கோவை டிராவல் ஏஜெண்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் இந்திய தொழில் வர்த்தக சபை – கோவையின் தலைவர் ஸ்ரீ ராமலு சிறப்பு விருந்தினராகவும், கொடிசியா தலைவர் திருஞானம் கௌரவ விருந்தினராகவும் மற்றும் கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனர். இதில் ஜெய் சன் டூரிசம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாரதி தலைமையிலான புதிய நிர்வாகிகள் குழு பொறுப்பேற்றுக் கொண்டது.

புதிதாக தலைவராக பொறுப்பேற்று கொண்ட பாரதி பேசுகையில், கொங்கு பகுதியை சர்வதேச சுற்றுலா  பகுதியாக பலப்படுத்தவும், குறிப்பாக கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ( வால்பாறை, பரளிக்காடு, வெள்ளியங்கிரி) முக்கிய சுற்றுலா பகுதிகளாக கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். அதே போல 2015ல் இந்த சங்கத்தை துவங்கும்போது 15 உறுப்பினர்களாக இருந்தது. தற்போது 70 ஆக மாறியுள்ளது. இதை அடுத்த 2 ஆண்டுகளில் அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் தலைவர் ஸ்ரீ ராமலு பேசுகையில், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலாவை பலப்படுத்தவும் கோவையின் கலாச்சாரம் வரலாறு இயற்கை அழகை அதிகப்படியான மக்களிடம் எடுத்துச்செல்லவும் கோவை டிராவல் ஏஜெண்ட் சங்கம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக உழைத்து உள்ளது. பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் உயரவும் இவர்கள் பங்களித்துள்ளனர். தொடர்ந்து மேற்கு தமிழகத்தை முக்கிய சுற்றுலா பகுதியாக எடுத்துச் செல்வதில் அவர்கள் பங்கு நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.