மருதமலை கோவிலில் 5.20 கோடியில் மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் துவக்கம்

கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டணசீட்டு வழங்கும் இடம் ஆகியவற்றுடன் கூடிய மின்தூக்கி 5.20 கோடி மதிப்பீட்டிலும், மருதமலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் வரையில் உள்ள தார் சாலை சீரமைக்கும் பணியை 3.51 கோடி ரூபாய்  மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பூமி பூஜையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி முலம் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார், இந்து சமய‌ அறநிலையத்துறை துணை ஆணையர் தர்ஷினி, துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டவர்கள் காணொளி காட்சி மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அதை தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க வேள்வி பூஜை, செய்தி பூஜை செய்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வடவள்ளி பகுதி செயலாளர் சண்முக சுந்தரம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.