டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில், கருத்தரங்கம்

காரமடை, டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மற்றும் உள் புகார் குழுவின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் கோகிலா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார்.

கோவை, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் இணைச்செயலாளர் கிரிஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘உள் புகார் குழுவின் செயல்பாடுகளும், தீர்வு வழிமுறைகளும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசிய உரையில், “தற்போதைய கால கட்டங்களில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களால் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கல்வி பயிலும் இடங்களிலோ, பணி புரியும் இடங்களிலோ பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் இடமாக உள் புகார் குழு செயல்படுகிறது.

அரசு இதற்கான பல சட்டங்களை இயற்றி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இச்செயல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாதிப்புக்கு உள்ளானோர் அச்சம் கொள்ளாமல் இத்தகைய புகார்களை சம்பந்தப்பட்ட  துறையில் தெரிவிக்க வேண்டும். உள் புகார் குழுவின் நடைமுறை  செயல்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழுத்தலைவர் ராஜலட்சுமி மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.