கோவை பட்டு விவசாயிகளுக்கு ரூ.11.55 லட்சம் மதிப்பில் நலத்திட உதவிகள்

பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.11.55 லட்சம் மதிப்பில் நலத்திட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பட்டு வளர்ச்சித்துறைக்கான திறனாய்வு கூட்டத்தில், பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.11.55 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் கோவை பட்டு வவார்ச்சித்துறை உதவி இயக்குநர் அப்துல் பாரூக் மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் பின்வருமாறு:

1) மாநில திட்டம் 2022-23 மாவட்ட அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்குதல் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் சிறந்த முதல் 3 பட்டு விவசாயிகளுக்கு, முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் என மொத்தமாக ரூ.60 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

2) மத்திய பகுதி திட்டம் 2012-22- தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித்தொகை வழங்குதல் திட்டத்தின் கீழ் தனி புழுவளர்ப்பு மனை அமைத்து பட்டு வளர்ப்பு செய்து வரும் 1 பட்டு விவசாயிக்கு ரூ.3 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

3) மாநில திட்டம் 2022-23- தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித்தொகை வழங்குதல் திட்டத்தின் கீழ் தனி புழுவளர்ப்பு மனை அமைத்து பட்டு வளர்ப்பு செய்து வரும் 1 பட்டு விவசாயிக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

4) மத்திய பகுதி திட்டம் 2012-22-நவீன பட்டுப்புழு வளர்ப்புத்தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ் புழுவளர்ப்பு மனையில் பட்டுத்தொழில் செய்து வரும் 6 பட்டு விவசாயிகளுக்கு (தலா ரூ.56 ஆயிரத்து 250/- மதிப்பிலான) தளவாட மற்றும் பண்ணை உபகரணங்கள் மொத்தமாக ரூ.3 லட்சத்து 37 ஆயிரத்து 500 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

5) மாநில திட்டம் 2022-23- நவீன பட்டுப்புழு வளர்ப்புத்தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ் நன்றாக பட்டுத்தொழில் செய்து வரும் 6 பட்டு விவசாயிகளுக்கு (தலா ரூ.52 ஆயிரத்து 500/- மதிப்பிலான) தளவாட மற்றும் பண்ணை உபகரணங்கள் மொத்தமாக ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

6) மத்திய பகுதி திட்டம் 2012-22-தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கான இடுபொருட்கள் (கிருமிநாசினிகள்) வழங்குதல் திட்டத்தின் கீழ் புழுவளர்ப்பு மனையில் பட்டுத்தொழில் மேற்கொண்டு வரும் 6 பட்டு விவசாயிகளுக்கு (தலா ரூ.3 ஆயிரத்து 750/- மதிப்பிலான) கிருமிநாசினி மருந்துப் பொருட்கள் மொத்தமாக ரூ.22 ஆயிரத்து 500 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.