பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: திருச்சியில் உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்றும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது இறப்பிற்கு காரணம், கொரோனாவா அல்லது இன்ஃபுளுயன்சா பாதிப்பா என ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். இன்ஃபுளுயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம். கொரோனா விதிமுறைகளான சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்ப்ளூயன்சா இருந்தால் தனியாக அமரவைத்து தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.