கோழி குஞ்சுகளின் இனத்தை கண்டறிய தானியங்கி சிஸ்டம்: கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, டென்மார்க் கோ., லிமிடெட் (டெக்ஸ்) இணைந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் இமேஜிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோழி குஞ்சுகளின் ஆண், பெண் இனத்தை கண்டறியும் உலகின் முதல் தானியங்கி சிஸ்டத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

டெக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி யூசுகே நகானோ, மூத்த செயற்கை நுண்ணறிவு பொறியாளர் ஜூனிச்சி யமசாகி, டெக்ஸ் இந்திய நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் கீர்த்தனா லட்சுமி, கே.பி. ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா, கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் துறைத்தலைவர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலையில் காணொளி காட்சி முறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இமேஜிங் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கோழி குஞ்சுகளின் இனத்தை குறைந்த செலவில் கண்டறிவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தற்போது நடைமுறையில் உள்ள அதிக நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக்கொள்ளும் கையால் இனத்தை கண்டறியும், முறையை மாற்றும்.

இத்திட்டத்தில் கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறை மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களும் டெக்ஸ் நிறுவனத்தின் நிபுணர்களுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவார்கள்.

கல்லூரியின் முதல்வர் அகிலா கூறுகையில், இந்தத் திட்டம் எங்கள் மாணவர்களுக்கு, வெளிநாட்டு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நடைமுறை அனுபவத்தைப் பெறுவதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்றார்.

டெக்ஸ் இந்திய நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் கீர்த்தனா லட்சுமி கூறுகையில், இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரும் பொழுது, கோழி பண்ணை தொழிலில் புதிய மாற்றத்தை உண்டாக்கும். இத்திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் கூறினார்.