கோவையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ள சூழலில், கேரளாவை ஒட்டி உள்ள, கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் இருவர் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் வால்பாறையை சேர்ந்த பொன்னையன் என்பவர், சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் , கோவை மாவட்டத்தை பொருத்தவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,  எலிக் காய்ச்சல் பாதிப்பு எவ்வாறு பரவுகிறது மற்றும் அதன் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்தும் , விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். காய்ச்சல், கண் எரிச்சல் இதுபோன்ற சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகளே இந்த காய்ச்சலுக்கும் இருப்பதால், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.