சச்சிதானந்த பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் கல்வி ஆலோசகர் கணேசன், பள்ளியின் திரிசூல், அக்னி, ஆகாஷ் மற்றும் பிருத்தவி அணிகளைச் சேர்ந்த மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து தனது வாழ்த்துரையில், பள்ளி மாணவர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் உங்களுக்கும் உண்மையுள்ளவர்களாக விளங்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நமது நாட்டிற்காக உங்களது பங்களிப்பினை நல்ல முறையில் வழங்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் விழாவின் ஒரு பகுதியாக, மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச் சிந்தனைப் பட்டிமன்றம் நடைபெற்றது. “சாதனையாளர்கள் உருவாவது சுயமுயற்சியினால்! சூழ்நிலையால்!” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், கோவை இரா. தனபால் நடுவராக பங்கேற்றார்.

‘சுயமுயற்சியால்!’ அணியில், பள்ளியின் கணித ஆசிரியர் ராஜசேகர், ஆங்கில ஆசிரியை மகாலட்சுமி, ஒன்பதாம் வகுப்பு மாணவி லக்ஷனா, மாணவர் திலீபன் ஆகியோர் பேசினர்.

‘சூழ்நிலையால்!’ அணியில், தமிழாசிரியர் சிவக்குமார், ஆங்கில ஆசிரியை செல்வி, பதினொன்றாம் வகுப்பு மாணவர் பிரணவ், ஒன்பதாம் வகுப்பு மாணவி தேஷ்னா ஆகியோர் பேசினர்.

இரு தரப்பினரின் வாதங்களுக்குப் பின்னர், நடுவர் தனபால், ‘சாதனையாளர்கள் உருவாவது சுயமுயற்சியால்தான்’ என்று தீர்ப்பளித்ததுடன், இளம் வயதிலேயே மாணவர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டால், எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அதனைச் சாதகமாக்கிக்கொண்டு சாதனையாளர்களாக உருவாகலாம் என்றார்.

நிகழ்விற்கு பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.