2023 இல் பாதுகாப்பு நிறைந்த பணி எது? – ஆய்வறிக்கை கூறும் தகவல்

2023 ஆம் ஆண்டில் அதிக தேவையுள்ள வேலைவாய்ப்பு நிறைந்த துறைகளின் பட்டியலை யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. தேவை, வளர்ச்சி, சராசரி சம்பளம், வேலைவாய்ப்பு விகிதம், எதிர்கால வேலைவாய்ப்புகள், மன அழுத்த நிலை மற்றும் வேலை, வாழ்க்கை சமநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதன்படி, சாப்ட்வேர் டெவலப்பர் பணி இந்த ஆண்டு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இந்தப்பணி இருந்தது. அமேசான், மெட்டா, சேல்ஸ்ஃபோர்ஸ் உள்பட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உலகளாவிய பொருளாதார மந்த நிலையால், பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு வந்தாலும், சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கான தேவை அதிகரித்த நிலையிலேயே உள்ளது.

மேலும் இந்த அறிக்கை வெளியிட்ட 20 பணிகளில் சுகாதாரத்துறை சார்ந்த வேலைகள் அதிக பணிப் பாதுகாப்பு நிறைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவர், செவிலியர் மற்றும் இதர சுகாதாரப் பிரிவில் உள்ள பணிகளை சிறந்த வேலைவாய்ப்பாக பட்டியலிட்டுள்ளது.

2023ல் பணி பாதுகாப்பே முதலில் முக்கியம் எனக்கூறும் இந்த ஆய்வறிக்கை, ஸ்திரமற்ற பொருளாதாரச் சூழல் நிலவும் இக்காலக்கட்டத்தில் நிலையான வேலைவாய்ப்பை தேடுபவர்கள் பெரும் சவாலை சந்திக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஐடி ஊழியர்களில் 25 சதவீதம் பேர் வேறுவேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர் என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து வேலைபார்ப்பவர்கள் கடும் போட்டிச் சூழலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ZipRecruiter வெளியிட்ட சமீபத்திய ஆய்வின்படி, தெரிவிக்கப்பட்டுள்ளது.