உயிர் அமைப்பின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து ஒரு நாள் வகுப்பு

கோவை கங்கா மருத்துவமனையின் உயிர் அமைப்பு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் கோவை மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து ஒரு நாள் வகுப்பு எடுக்கப்பட்டது.

இதில் காவலர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு, சாலை விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதனை அடுத்து ஆசிரியர்கள் பள்ளிகளில் 3 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இதில் கற்றுத் தரப்பட்ட சாலை பாதுகாப்பு, சாலை விதிமுறைகள் குறித்து விவரிப்பர்.

இந்நிகழ்ச்சி வெங்கடாபுரம் பகுதியில் உள்ள அவிலா கான்வென்ட் தனியார் பள்ளி அரங்கில் நடைபெற்றது. இதில் கங்கா மருத்துவமனை தலைவர் ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.