மெட்ரோவும், மேம்பாலமும் வேண்டும்!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய தொழில் மையமாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் இருப்பது கோவை நகரமாகும். ஆனால் இதன் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் இதன் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது இங்கு தொடர்ந்து இருந்து வரும் ஒரு குறைபாடாகும்.

குறிப்பாக சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றை பலவகையிலும் மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஏற்றுமதி சார்ந்த தொழில்துறையினர் செயல்பாட்டுக்கு சென்னை தூத்துக்குடி, கொச்சின் போன்ற நகரங்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதைப்போலவே நிலக்கரி, இரும்பு தாது உள்ளிட்ட மூலப்பொருட்களைக் கொண்டு வரவும், உற்பத்தி பொருட்களை வெளியே கொண்டு செல்லவும், பல மாநிலங்களின் வேறு பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவும் நமக்கு போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகின்றன. இதற்கு ரயில் மற்றும் சாலை வசதி என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

சுமார் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களோடு சேர்த்துப் பார்த்தால் பல ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகள் மட்டும் அல்லாது கல்வி, மருத்துவ நிலையங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு மக்கள் அன்றாடம் சென்று வருவதில் சிரமங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

கோவையின் போக்குவரத்து நெருக்கடி என்பது சொல்லி மாளாது. இதனை சமாளிக்க அரசாங்கமும் ஆங்காங்கே மேம்பாலம் போன்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. என்றாலும் கோவை நகரப் பகுதியின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பது பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக நகரை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. பழைய மேம்பாலங்களுடன் சில புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டிருந்த பொழுதும் எதிர்கால தேவையை சமாளிக்கும் அளவுக்கு இருக்கிறதா என்பது ஐயத்துக்குரியது. தற்போது உள்ள போக்குவரத்து நெரிசலையே நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பது நடைமுறை உண்மை.

இந்த நிலையில் சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான திட்டம் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு வரை வந்திருக்கிறது. இந்த நிலையில் கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான திட்டம் இருப்பதால் மேம்பாலங்கள் கட்டப்படுவதற்கு ஆட்சேபம் எழுப்பப்பட்டுள்ளது.

அதனால் தொழில் துறையினர், பொதுமக்கள் இடையே குழப்பமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அரசாங்க மட்டத்தில் இதற்காக இந்த திட்டங்களுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரின் கருத்தையும் கேட்கும் வகையில் ஒரு ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

கோவையைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் என்பது இந்த நகரத்துக்கான ஒரு கனவுத் திட்டம். பல ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மெட்ரோ ரயில் வரவேண்டும் என்று கோவையில் பல தொழில் அமைப்புகளும், ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தார்கள். ஏதேதோ காரணங்களால் கோவை நகருக்கு இந்த நிமிடம் வரை அந்த மெட்ரோ ரயில் பாக்கியம் கிடைக்கவில்லை.

இதற்கு பிறகு திட்டமிடப்பட்ட கொச்சி போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேறி மக்கள் சுகமாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு இன்னும் பேச்சு வார்த்தைகள் நிலையில்தான்  மெட்ரோ ரயில் திட்டம் உள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் திட்டம் தான் வேண்டும் என்றால் அது வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ யாருக்கும் தெரியாது.

மேலும் கோவைக்கு மெட்ரோ ரயில் வருவதற்கு பல்வேறு இடையூறுகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் முதலாவது இடையூறு என்பது தேவையான நிலத்தை கையகப்படுத்துதல் ஆகும். அதில் எதிர்த்து ஏதாவது ஒரு வழக்கு வந்தால் கண்டிப்பாக ஆண்டுக் கணக்கில் தாமதம் ஆகிவிடும்.

இது போக அவினாசி சாலை போன்ற இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கு தனியாக தூண்கள் அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்திருக்கிறது. திருச்சி சாலையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு விட்டன. இதில் மெட்ரோ ரயில் திட்டம் என்னென்ன மாறுதல்களுடன் வரப்போகிறது, எங்கெங்கு அதற்காக நிலத்தை கையகப்படுத்துவது என்றெல்லாம் இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.

இந்த நிலையில் தான் மூன்று மேம்பாலங்கள் கட்டுவதா, மெட்ரோ ரயில் வேண்டுமா என்ற நிலை எழுந்துள்ளது. நாளை கிடைக்கும் பலாப்பழத்தை விட இன்று கையில் கிடைக்கும் களாக்காய் மேல் என்றொரு பழமொழி உண்டு. அந்த வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மூன்று மேம்பாலங்களும் உடனடியாக தொடங்கப்பட்டு விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும். அதற்காக மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டு விட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு என்ன விதமான தொழில்நுட்ப மாறுதல்கள் செய்து எவ்வளவு விரைவாக கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவர முடியுமோ அந்த விதமாக விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூர் என்ற மூன்று இடங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மறைமுகமாக மக்களின் ஏராளமான நேரம் மற்றும் ஆற்றல் வீணாவது என்பது கணக்கிட முடியாத அளவு அதிகரித்துக் கொண்டு போகிறது.

ஒரு நாளைக்கு பல ஆயிரம் வாகனங்கள் இந்த போக்குவரத்து சிக்னல்களைத் தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. எனவே இந்த மூன்று மேம்பாலங்கள் என்பது கோவை மக்களின் உடனடி தேவை. மெட்ரோ ரயில் என்பது காலத்தின் கட்டாயம். இரண்டையும் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பது கோவை நகரின் ஒட்டு மொத்த மக்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்பார்ப்பு ஆகும்.