கோவையில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் அரசு

கோவையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. ஒருகிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் இடை நின்ற மாணவர்கள் கணக்கு எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. கணக்கு எடுப்பில் 6 வயது பூர்த்தியடைந்தும் பள்ளி செல்லாத குழந்தைகள், 6 வயது முதல் 18 வயது வரை இடை நின்ற மாணவர்கள் பட்டியல் தொகுக்கப்பட உள்ளது.

இதற்கான பணிகள் கோவையில் மேற்கொள்ளப்பட்டு ஊரக வளர்ச்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடியிருப்பு விவரங்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்த கணக்கெடுப்பு பணியின் போது சைல்டு லைன், தொழிலாளர் நலத்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநின்ற மாணவர்களாக கருதி பள்ளி வாரியாக பட்டியல் பெற்று உள்ளோம். மேலும் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுக்கும் மாணவர்களையும் இதில் சேர்த்து உள்ளோம்.

ஒவ்வொரு குடியிருப்பாக அந்த பகுதியில் உள்ள அங்கன் வாடி மைய பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கணக்கு எடுப்பில் ஈடுபட்டு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த பணி ஜனவரி மாதம் 2 -வது வாரம் வரை நடைபெற உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.