மலுமிச்சம்பட்டி இசைக்கல்லூரியில் கலைப் போட்டிகள்: பங்கேற்க அழைப்பு

கோவை, மலுமிச்சம்பட்டி இசைக்கல்லூரியில் வரும் 17ம் தேதி கலைப் போட்டிகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட கலைப் போட்டிகள் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள இசைக்கல்லூரி வளாகத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.

இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடை பெறுகிறது. மேலும் 5-8, 9-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும்.

குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும்.

பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டியில் அதிகபட்சம் 3 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழுநடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப் போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்கால்குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெறவேண்டும்.

ஓவியப்போட்டியில் ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

பங்குபெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். 9-12, 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர். மேலும் விவரம் வேண்டுவோர் கோவை மண்டலக் கலை பண்பாட்டுமைய அலுவலகத்தை 0422 – 2610290 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.