வ.உ.சி பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டம்

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டு வருகிறது.

கோவையின் பிரதான சுற்றுலாத்தளங்களுள் ஒன்றாக இருந்து வந்தது தான் வ.உ.சி உயிரியல் பூங்கா. நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள மாநகராட்சி வ.உ.சி உயிரியல் பூங்காவில் ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 400 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உயிரியல் பூங்கா ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் பராமரிப்பு செய்து வந்தது இந்த பூங்கா மட்டுமே. கோவையில் மட்டுமே இந்த நடைமுறை இருந்த நிலையில் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நிர்வாக காரணங்களால் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ரத்து செய்தது.

பொதுமக்களின் பொழுது போக்கு பூங்காவாக இருந்த வ.உ.சி பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் விலங்குகளை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இது கோவை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை புதுப்பித்து புதிய அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வ.உ.சி பூங்காவை உயிரியல் பூங்காவாக இல்லாமல் பறவைகள் பூங்காவாக மாற்றி அமைத்து இயக்க திட்டம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், கோவை நஞ்சப்பா சாலையில் சிறை மைதானம் பகுதியில் மாநகராட்சி இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் உயிரியல் பூங்கா மீண்டும் அமைக்க திட்டம் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த இரு திட்டங்கள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. அறிக்கை தயாரிப்பிற்குப் பின் பூங்கா அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.