கோவையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தீண்டாமையை எதிர்க்கும் இயக்கம் பாஜக – வானதி சீனிவாசன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்தும், கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கைதை கண்டித்தும் கோவையில் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிவானந்தா காலணியில் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் ஏ.பி முருகானந்தம், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஆ. ராசாவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பீளமேடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்து 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவரது கைதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யபபட்டு விடுவிக்கப்பட்டனர்.

மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசியதாவது: திமுகவினர் இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர். இந்து எதிர்ப்பை அப்போது இருந்தே முன் வைத்து வருகின்றனர். ஆனால் இன்று அப்படி இல்லை. நீங்கள் இழிவுபடுத்தி பேசினால் அதை எதிர்த்து போராட நாங்கள் வருவோம். ஆ. ராசா பேசிய பேச்சு அநாகரிகமானது. அவர் மதமாற்றத்திற்கு தூண்டுகிறார்.

100 ஆண்டுகளாக தீண்டாமையை ஆர்.எஸ்.எஸ், பாஜக எதிர்த்து வருகிறது. திமுக தான் ஜாதியை வளர்த்து வருகிறது.
பாஜக தீண்டாமையை எதிர்க்கும் இயக்கமாகவும், விழிம்பு நிலை மக்களை கை தூக்கி விடும் இயக்கமாகவும் உள்ளது.

கோவையில் ஒரு சாலை கூட சரியாக இல்லை என குற்றம் சாட்டிய அவர், குப்பைகள் சரியாக தூர்வாரப் படுவதில்லை என்றும், தண்ணீர் சரியாக வருவேதில்லை என்றும் கூறினார்.

அவிநாசி சாலை முழுவதும் திமுக போஸ்டர்கள் உள்ளது. மாநகராட்சி போஸ்டர் ஒட்டக் கூடாது என அறிவித்தும் கோவை திமுக பொறுப்பாளர்கள் போஸ்டர் ஓட்டி உள்ளனர்.

திமுகவினர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர், இதை கோவை மாவட்ட பாஜக பார்த்துகொண்டு இருக்காது எனப் பேசினார்.

அண்ணாமலை பேசுகையில்: இங்கு கூடி இருக்கும் கூட்டத்தை பார்த்தால் இது ஒரு சரித்திர கூட்டமாக உள்ளது.

அனைவருக்குமான முதல்வர் ஆக இருப்பேன் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அவர் தற்போது அப்படி நடந்து கொள்ளவில்லை.

ஆ. ராசா ஊழல் செய்தவர். அவர் இந்துக்களை அவமதித்து பேசியது இது ஒன்றும் புதிது கிடையாது. இதற்கும் முன்பு இப்படி பேசி உள்ளார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

பாஜகவை எப்படி சமாளிப்பது, மக்களை எப்படி திசை திரும்புவது என திமுகவினர் நினைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல பிரச்னைகளை பாஜக பேசி வருகிறது.

பாஜகவினர் தான் சுய மரியாதைகாரர்கள். திமுகவினர் அல்ல. சுயமரியாதையும், சமூக நீதியும் எங்களுக்கு சொந்தமானது என்று பேசினார்.